அமைச்சரை மருத்துவமனையில் போய் பார்க்கும் நிலை விரைவில் ஏற்படும்.. எச்சரிக்கை விடுத்த அதிமுக மாஜி!
தூத்துக்குடி : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது "ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்து தமிழ்நாட்டை நாசமாக்கிய பாவத்தை செய்தவர்களில் நானும் ஒருவன்" எனப் பேசினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் இந்தப் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கண்டித்துள்ளார்.

ஜெயலலிதாவை விமர்சித்த கேகேஎஸ்எஸ்ஆர்
திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவை ராட்சசி என்றும், ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுகாலம் அனுபவித்தோம் என விமர்சித்திருந்தார். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் இந்தப் பேச்சு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆசிட் வீசியபோது
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மறைந்த தலைவர் பற்றி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியது மிகவும் கண்டனத்துக்கு உரியது. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசி அவரை அவரே அசிங்கப்படுத்தி கொண்டார். ஆசிட் வீச்சின் போது தனது முகம் பாதிக்கப்பட்ட போது நேரடியாக சென்று அவரை பார்த்து உரிய சிகிச்சை அளிக்கச் செய்து அவரது உயிரை காப்பாற்றியது ஜெயலலிதா தான். " எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சென்று பார்க்கும் சூழல் வரும்
மேலும், "தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம். விரைவில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்." என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

எப்போது தேர்தல் வந்தாலும்
தொடர்ந்து பேசிய அவர், "எட்டு வழிச் சாலை திட்ட விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை போடுகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக அழிந்து விடும் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்தார். அதிமுக எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.

துரோகிகளுக்கு வாழ்வு
முன்னதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் ...நாவடக்கம் தேவை.. நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி மறந்த உங்களுக்காக ஆரம்ப காலங்களில் பல தேர்தல்களில் உழைத்து அதிமுக தான் தவறிழைத்துவிட்டது. விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications