அன்புமணிக்கு வெளி உலகத்துல என்ன நடக்குதுனே தெரியல.. அதிமுக எம்எல்ஏ பரபர பேச்சால் மீண்டும் உரசல்!
சென்னை : நெய்வேலி என்.எல்.சி விவகாரத்தில் தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதாக அன்புமணி பேசுவது கண்டனத்திற்குரியது என்றும், வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அன்புமணி இருப்பதாகவும் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக பாமக - அதிமுக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏவின் இந்த கருத்து மீண்டும் அனலைக் கிளப்பியுள்ளது.
அதிமுக - பாமக இடையே மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக பற்றி பேசியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றினார். அதற்கு பாமகவின் வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுக்க இந்த விவகாரம் முற்றியது. இந்நிலையில் என்.எல்.சி விவகாரத்தால் இந்த மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆளுநர் vs திமுக மோதல் உச்சமடைந்துள்ளது. சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்துடன் சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாளை மீண்டும் சட்டப்பேரவை கூட இருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏ
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுகவின் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி எம்எல்ஏ அருண்மொழித் தேவன், நெய்வேலி பகுதி மக்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என அறிவித்த திமுக அரசு, தற்போது வரை அமைக்கவில்லை என குற்றம்சாட்டினார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலம் கொடுத்தவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்புமணிக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
மேலும் நெய்வேலி விவகாரத்தை பாமக தான் கையில் எடுத்து குரல் எழுப்பி வருவதாக கூறுவது தவறான பேச்சு எனவும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக அதிமுக விளங்குவதாகவும் அருண்மொழித் தேவன் பேசினார். தனக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போல அன்புமணி பேசுவது கண்டத்துக்குரியது எனவும் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அன்புமணி இருப்பதாகவும் அருண்மொழி தேவன் விமர்சித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாட்கள் கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ச்சியாக என்.எல்.சி நிர்வாகத்தின் நில கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராகப் பேசி வரும் அன்புமணி, பாமகதான் உண்மையான அக்கறையுடன் விவசாயிகளுக்காகப் போராடி வருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தான் அன்புமணியின் பேச்சை விமர்சித்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன். இது பாமக - அதிமுக இடையேயான மோதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சால் எழுந்த குழப்பம்
அன்புமணி ராமதாஸின் பேச்சு அ.தி.மு.க - பா.ம.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, அதிமுக நான்காக உடைந்துள்ளது. அடுத்தது நாம்தான். தமிழ்நாட்டில் பாமக-விற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகள் பிரிந்து, உடைந்து, தேய்ந்து போய் இருக்கின்றன. நாம் வளர்ச்சியை நோக்கி செல்கிறோம் எனப் பேசினார். அன்புமணியின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றினார். பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுக தான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது. அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி என்ற பதவியை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க தான் என பதிலடி கொடுத்தார்.

கூட்டணிக்குள் முட்டல்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, அதிமுக பிளவுபட்டுள்ளதாக அன்புமணி கூறியது சாதாரண குழந்தைக்குக் கூட தெரியும். அன்புமணி எம்.பி ஆனதில் ஜெயக்குமார் பங்கு என்ன? கூட்டணி ஒப்பந்தத்தின் படியே அன்புமணிக்கு அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. 1998-ல் ஜெயலலிதா, பா.ம.க அலுவலகத்தைத் தேடி வந்து ராமதாஸுடன் பேசி கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற்றார். அதிமுக வீழ்ந்து கிடந்த போது அதற்கு உயிர் கொடுத்தது பாமக தான் எனப் பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications