நிலக்கரி மாயம்..அதிமுகவுக்கு காத்திருக்கும் அடுத்த செக்..முதல்வர் ஸ்டாலினிடம் செல்லும் முக்கிய பைல்
சென்னை: தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள், வழக்குகள் தூசி தட்டப்படுகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை குறிவைத்து ரெய்டுகள் நடைபெற்றன. இதுஒருபக்கம் இருக்க கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆவின் முறைகேடு
இதுமட்டுமின்றி அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களில் நடந்த முறைகேடுகள் இப்போது களையெடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர் நாசர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பணி நியமனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆவினில் 34 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்
இதனை தொடர்ந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வு செய்தபோது, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருப்பது தெரியவந்தது. பதிவேட்டில் உள்ளதற்கும், களத்தில் உள்ள இருப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

தங்கமணி விளக்கம்
அ.தி.மு.க ஆட்சியில் நடந்த மிகப்பெரிய தவறு இது. எங்கே தவறு ஏற்பட்டது?, இந்த தவறு எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து ஆய்வு குழு அமைத்து விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். ''வடசென்னை அனல்மின் நிலையத்தில் அ.தி.மு.க அரசு ஏற்கனவே எடுத்த கணக்கைத்தான் தாங்கள் கண்டுபிடித்ததைப் போல அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு வந்தநேரத்தில் நாங்கள் குழு அமைத்து ஆய்வு செய்தோம். அப்போதே நிலக்கரி குறைந்திருந்த விவகாரம் தெரியவந்தது'' என்று அ.தி..மு.க.வின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்து இருந்தார்.

யாரும் தப்ப முடியாது
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று கரூரில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி ''ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டதாக கூறியுள்ளது. எந்த குழு அமைக்கப்பட்டது? அப்படி குழு அமைக்கப்பட்டாலும் அதன் விசாரணை அறிக்கை எங்கே? என்பது தெரியவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு விசாரணை அறிக்கை வந்தவுடன், அது உடனடியாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்பு நடவடிக்கை தீவிரமாகும். முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதில் இருந்து தப்ப முடியாது'' என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வுக்கு செக்
அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியபடி நிலக்கரி மாயம் தொடர்பான விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முக்கிய பைல் ஒன்று விரைவில் முதல்வரிடம் சமர்பிக்கப்படும் என்றும் அதன்பிறகு தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கை தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் அ.தி.மு.க.வுக்கு அடுத்த செக் தயாராக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications