செங்கோட்டையன் சொன்ன அற்புதம் நடக்க போகுதா?விஜய்யால் இந்தியாவே வியக்க போகுதா? எகிறிய 15% ஓட்டு
சென்னை: செங்கோட்டையன் ஆருடம் சொன்னதை கேட்டு தவெகவினர் உச்சக்கட்ட நம்பிக்கையிலும், மகிழ்ச்சியில் உள்ளனர்.. இப்போது தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. காலம் காலமாக நிலைபெற்றுள்ள திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் தவெக எடுத்து வைத்துள்ள ஒவ்வொரு அடியும் இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை, அதற்கு மேல் வாக்காளர்களின் கவனம் பெற்று வருகிறது.
விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டது முதல், அவருடைய கட்சியின் கொள்கை விளக்க மாநாடு வரை அனைத்தும் மற்ற கட்சிகளுக்கு ஒருவித திகைப்பை தந்துள்ளன.

குறிப்பாக, அடித்தட்டு மக்களிடமும் இளைஞர்களிடமும் தவெகவிற்கு கிடைத்து வரும் வரவேற்பு, பாரம்பரிய அரசியலில் ஊறிப்போன பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. இதுவரை தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பியவர்களுக்கு ஒரு வலுவான மாற்றாக தவெக உருவெடுத்துள்ளது என்பது நிதர்சனம்.
விஜய் தவெக எழுச்சி
இந்த எழுச்சியானது வெறும் உணர்ச்சிகரமானதாக மட்டுமல்லாமல், திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு விரிசலை உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
தவெக கட்சியின் கொள்கைகளும், அதன் செயல்பாடுகளும் சோஷியல் மீடியாவை தாண்டி வீதிக்கு வந்துள்ள நிலையில், இது தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய பிரதான விவாதம்.
ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் என இருமுனையிலும் உள்ள திராவிட இயக்கங்கள், தவெகவின் வரவை மேலோட்டமாக சாதாரணமாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒருவிதப் பதற்றத்தில் இருப்பதை சிலரது பேச்சுகளிலேயே உணர முடிகிறது.
திராவிட கோட்டைகள்
இத்தனை காலமும் தாங்கள் கட்டமைத்திருந்த அரசியல் பிம்பம் ஒரு புதிய சக்தியால் கேள்விக்குள்ளாக்கப்படுவதை அந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றே தெரிகிறது.. இது ஒரு சாதாரண அரசியல் வருகை மட்டுமல்ல, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்பதையே தவெக மாநாடுகளில் கூடிய லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரம் உணர்த்தியது.
நேற்றைய தினம் எக்ஸிட் போல்களிலும் தவெக ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் அறிய முடிந்தது.. தவெக சுமார் 11 முதல் 15 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, திமுக கட்சி பிரதான வாக்கு வங்கி
சில தொகுதிகளில் தவெக பெற்ற வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைப் பெரிய அளவில் தவெக ஈர்த்துள்ளது.
இந்த வாக்குகள் பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்குச் செல்லும் வாக்குகளில் ஒரு பகுதியைத் தன்பக்கம் இழுத்திருப்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் பல இடங்களில் தவெக பெற்றுள்ள இந்த இரட்டை இலக்க வாக்கு சதவீதம், இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் இருமுனைப் போட்டியிலிருந்து மும்முனைப் போட்டியாக மாறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளன..
அற்புதம் நடக்க போகிறதா
தவெக பெற்ற இந்த வாக்குகள் திராவிடக் கட்சிகளுக்கு ஒருவிதத் திகைப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்கால அரசியல் கணக்குகளையும் மாற்றிப் போட்டுள்ளது. பல இடங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை தவெகவின் வாக்குப்பிரிப்பு கடுமையாகப் பாதித்துள்ளதை இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இதையெல்லாம் கணக்கிட்டுதான், தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.... அத்துடன் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் அதிசயம் அரங்கேறப் போகிறது என்பதை மிகத் துணிச்சலாக முன்வைக்கிறார்.
செங்கோட்டையன் தந்த ஹோப்
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "அற்புதம் நடக்கப் போகுது.. இந்தியாவே வியந்து பார்க்கும். ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போய் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
கருத்துக்கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சிலரால் சொல்லப்படுவது மட்டுமே. ஆனால், மக்கள் அலை என்பது முற்றிலும் வேறுபட்டது. இதுவரை தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு மக்கள் அலையை நாம் பார்க்கப்போகிறோம். விஜய் தலைமையில் விசில் புரட்சி, தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பேசப்படப் போகிறது.
விசில் புரட்சி
விஜய் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தை ஆள்வார் என்பது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வருகிற மே 4-ம் தேதி இந்தியாவே வியக்கும் அளவிற்கு இந்த விசில் சத்தம் ஒலிக்கும். அப்போது ஒரு மிகப்பெரிய அற்புதம் நடக்கும், அதை இந்தியாவே ஆச்சரியத்தோடு பார்க்கும்" என்று மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நேற்றைய எக்ஸிட் போல் தந்துள்ள கணிப்பும் சரி, செங்கோட்டையனின் இந்த விரிவானப் பேட்டியும் சரி, தவெக தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகத்தையும், எதிர் முகாம்களில் பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. ஆனால் நிஜமான கள நிலைமை இன்னும் 4 நாளில் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications