Breaking Bad தொடர்ந்து.. தமிழ்நாட்டில் Prison Breakம் தொடங்கிவிட்டது.. அடித்து ஆடும் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் பிரேக்கிங் பேட்-ஐ (Breaking Bad) தொடர்ந்து தற்போது பிரிசன் பிரேக்கும் (Prison Break) தொடங்கிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா, சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 17 கைதிகள் தப்பி இருக்கின்றனர். நேற்றிரவு 11 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக சிறை வார்டனை அழைத்துள்ளனர்.

தொடர்ந்து சிறைக்காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட இரு காவலர்கள் சிறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள் திடீரென அவர்களை தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். அவ்வளவு பாதுகாப்பு வாய்ந்த சிறையில் இருந்து க்17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
1995க்கு பின் ஒரே நேரத்தில் இவ்வளவு கைதிகள் தப்பியோடியது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது.
இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது என்று விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைத்த பின் இதுவரை 9 முறை சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. மொத்தமாக 50 கைதிகள் தப்பி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
