10 பேரு.. தமிழ்நாடு முழுக்க இறங்கி.. புது ‘டீம்’ அமைத்து தேர்தலுக்கு ரெடியாகும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்கட்சி பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி, கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தக் குழுவினர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு: கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அணைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கழகப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்" நியமிக்கப்படுகின்றனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் ஈழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும் அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.
1. கே.பி. முனுசாமி, MLA., கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
2. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
3. நத்தம் இரா.விசுவநாதன், M.L.A., கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. பி தங்கமணி, M.L.A, கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
5. S.P.வேலுமணி M.L.A., கழக தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
6. D. ஜெயக்குமார், கழக அமைப்புச் பப்பச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

7. C.Ve. சண்முகம், M.P., கழக அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
8. செ. செம்மலை, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
9. பா. வளர்மதி, கழக மகளிர் அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்
10. வரகூர் அ. அருணாசலம். கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

மேற்கண்ட குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications