"ஆம்ஸ்ட்ராங் அண்ணனை விட்டுட்டியேம்மா"! கதறும் திருவிக நகர்வாசிகள்! கலங்கும் பொற்கொடி! ஜெய்பீம்!
சென்னை: சென்னையின் திருவிக நகர் தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொன்முடி, அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். தனது கணவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க ஒரு அதிகாரம் தேவை என்பதால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். மற்றபடி பணத்திற்காகவோ புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்திவிட்டார்.
வடசென்னை மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங்! இல்லை என யார் சொன்னாலும் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங் என்கிறார்கள். வடசென்னையின் முகமாக இருந்தவர்.

அது போல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். சம உரிமை கிடைக்க வேண்டும் என போராடியவர் ஆம்ஸ்ட்ராங்! இதனால் அவரை அவரது ஏரியாவில் "அண்ணா அண்ணா.." என்றுதான் அழைப்பார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்தவர். வெள்ளை உடையில் கம்பீரமாக நடந்து சென்ற ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஒரு மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது.

கை குழந்தையுடன் தவிப்பு
அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு அருகே அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல், அவர் தப்பியோடிவிடாதபடி காலில் குறி பார்த்து வெட்டி அவரை சரிய வைத்தது. யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என தெரியாமல் கை குழந்தையுடன் அழுது கொண்டிருந்தவர் பொற்கொடி!
ஆம்ஸ்ட்ராங் இழப்பு
ஆம்ஸ்ட்ராங்கின் உயிரிழப்புக்கு தமிழக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் பொற்கொடிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இந்த நிலையில் பொற்கொடி , தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற ஒரு கட்சியை தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவிக நகரில் போட்டியிடுகிறார்.

திருவிக நகர்
திருவிக நகர் சட்டசபை என்பது பெரம்பூரின் ஒரு பகுதி, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தினந்தோறும் தனது ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு வீடாக போய் பொற்கொடி வாக்கு சேகரிக்கிறார்.
எல்லாவற்றையும் விட அவருக்கு விசிக திருமாவளவன், தவெகவின் ஆதவ் உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அது போல் கூட்டணி கட்சியான பாமக தலைவர் அன்புமணியோ, திருவிக நகர் எம்எல்ஏ என்றே பொற்கொடியை அழைக்கத் தொடங்கிவிட்டார்.
அழும் பெண்கள்
இந்த தொகுதிக்கு பொற்கொடி செல்லும் போதெல்லாம் பெண்கள், ஆம்ஸ்ட்ராங் மரணத்தை நினைத்து அழுகிறார்கள். பொற்கொடியும் மனம் வெம்பி அழுகிறார். பலர் "நீ தான்மா ஜெயிப்பே, என் வீட்டில் 10 ஓட்டு உனக்குத்தான், அங்கப்பாரு ஜெயலலிதாம்மா போட்டோ, நாங்கள் அதிமுககாரங்க, நீ தைரியமா போம்மா, எங்க ஓட்டு அதிமுகவுக்குத்தான்" என்கிறார்கள்.
இன்னும் சிலர் அண்ணன் இந்த பகுதிக்கு வந்தால் இந்த இடத்தில் நின்று யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பார் என ஆம்ஸ்ட்ராங்குடனான நினைவலைகளை பகிர்கிறார்கள். கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்பதை தாண்டி அவரை போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் என்ற குணம் படைத்தவராக இருக்கிறார் பொற்கொடி!

அதிகாரம்
வழக்கறிஞரான இவர் படிப்பு+ அதிகாரம் இருந்தால் தனது கணவரின் சம உரிமை கனவு நனவாகும் என போராடி வருகிறார். பொற்கொடி பார்ப்போர் பலரும் "அண்ணனை எப்படிமா விட்டுட்டே" என கதறி அழுகிறார்கள்.
இந்த மக்களின் பாசம், கண்ணீர் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பதை பார்க்கலாம். திருவிக தொகுதி 2008 ஆம் ஆண்டு உருவானது. அப்போது 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த நீலகண்டன் வென்றார்.
களநிலவரம்
அது போல் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திமுகவை சேர்ந்த பி.சிவக்குமார் (தாயகம் கவி) இரு முறை வென்றுள்ளார். தற்போது திமுக சார்பில் கே.எஸ்.ரவிசந்திரன் என்ற வேட்பாளர் களமிறங்கியுள்ளார். அது போல் அதிமுக சார்பில் பொற்கொடி இறங்கியுள்ளார்.
வாழ்க்கைத் தரம் உயருமா?
தற்போது 4 ஆவது முறையாக நடக்கும் இந்த தேர்தலில் பொற்கொடி வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வடசென்னை என்றாலே கஞ்சா, போதை, அடிதடி என சினிமாக்களில் காட்டி காட்டி அதுதான் வடசென்னை என மக்கள் மனதில் பதிந்த பிம்பத்தை உடைக்க பொற்கொடி உள்ளிட்டோர் போட்டியிட்டு வென்று அந்த பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். எத்தனை கலங்கினாலும் திருவிக நகர் முழுவதும் ஜெய்பீம் ஜெய்பீம் என முழக்கம் முழங்குகிறது.












Click it and Unblock the Notifications