அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக, பாமக, அமுமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் யார் யார்? எங்கே? போட்டியிடப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வேலைகளை திமுக கடந்த ஆண்டு தொடங்கியது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டணி கட்சிகள் எழுப்பியதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. ஆனால் தேர்தல் வேலைகளை தாமதமாக தொடங்கினாலும் முதல் ஆளாக கூட்டணி பங்கீட்டை முடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக கூட்டணி
ஒரே நாளில் பாஜக பாமக அமுமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அமுமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த கூட்டணியில் யார் யார்? எங்கே போட்டியிடப் போகிறார்கள்? என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இந்த உத்தேச பட்டியலின்படி, பாஜக பல முக்கிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி தளி, மொடக்குறிச்சி, கோவை வடக்கு, மதுரை தெற்கு, சிங்காநல்லூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, மயிலாடுதுறை, சாத்தூர், திருச்செந்தூர், நெல்லை, திருத்தணி, கும்பகோணம், வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர், வானூர், திருச்செங்கோடு, அந்தியூர், பழனி, திருப்பூர் தெற்கு, சூலூர், அரவக்குறிச்சி, ராசிபுரம் மற்றும் குன்னூர் உள்ளிட்ட தொகுதிகள் பாஜக பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி பட்டியல்
இதேபோல், பாமக கட்சிக்கும் வட மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் சமூக ஆதரவு உள்ள பகுதிகளை மையமாக வைத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், கும்மிடிப்பூண்டி, தருமபுரி, குன்னம், விழுப்புரம், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், திருவள்ளூர், சங்ககிரி, பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, ஜெயங்கொண்டம், திண்டிவனம் அல்லது அரூர், மயிலம், வானூர் அல்லது காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர் மற்றும் புவனகிரி உள்ளிட்ட தொகுதிகள் பாமக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அமமுக
அமமுக கட்சிக்கும் சில முக்கிய நகர்ப்புற மற்றும் தென் மாவட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை, சோளிங்கர், பூந்தமல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்திய தொகுதி, தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி மேற்கு மற்றும் மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி கட்சிகள்
இது மட்டுமல்லாமல் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் , தென்னிந்திய பார்வேர்ட் பிளாக், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஒன்று முதல் மூன்று தொகுதிகள் வரை போட்டியிடுகின்றன. அவை பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அந்த பட்டியலும் வெளியாகும் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications