"இனி சான்ஸ் இல்லை.." ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்.. வீரப்பா, நம்பியார் உதாரணம் வேற
சென்னை: அதிமுக தவறானவர்களின் கைகளில் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி சேருவீர்களா எனக்கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். அதிமுக தவறானவர்களின் கைகளில் உள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும்.'' என நடிகர்கள் பிஎஸ் வீரப்பா, எம்என் நம்பியார் ஆகியோரை நினைவு கூர்ந்து டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைக்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கூறினார். இதன் தொடர்ச்சியாக அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி டிடிவி தினகரன் கூறியதாவது:

தவறானவர்களின் கையில் அதிமுக
அதிமுக தவறானவர்களின் கைகளில் உள்ளது. ஜெயலலிதா வளர்த்த அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக தான் அமமுக உருவாக்கப்பட்டது. கட்சி தொடங்கியபோது மதுரை மேலூரில் பேசினேன். அப்போது பிஎஸ் வீரப்பா, எம்என் நம்பியார் கையில் எம்ஜிஆரின் கட்சியும், சின்னமும் உள்ளது என்றேன். இதனை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள், தளபதியாக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் நியமித்துள்ளனர். இதனால் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். தேர்தல் தோல்வியால் எங்களால் முடியவில்லை. இருப்பினும் நாங்கள் விடமாட்டோம்.

அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை
மேலும் அதிமுகவுடன் இணைவீர்களா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணி என்பது தேர்தல் வேளையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்கானது. எங்களின் பலமும், எங்களின் உயரமும் எங்களுக்கு தெரியும். சிலபேர் மாதிரி ஆணவம், அகம்பாவம், பணத்திமிரில் எங்கள் நடவடிக்கை இருக்காது.

ஜனநாயக ரீதியாக மீட்போம்
நாங்கள் வளர்ந்து வருகிற ஒரு இயக்கம். வருங்காலத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய உறுதியான தொண்டர்கள் கொண்ட இயக்கம். இந்த இலக்கை எட்டும் வரை போராடும். எங்களின் நோக்கம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சி, கொள்கைளை தமிழ்நாட்டில் நிலைநாட்டுவதாகும். இதற்காக தான் இந்த இயக்கம் உருவாகியது. இந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டோம். ஜனநாயக ரீதியாக நாங்கள் மீட்டெடுப்போம் '' என்றார்.

திமுகவை வீழ்த்த முடியும்
இந்த வேளையில் ‛‛அதிமுகவில் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்தாலும் கூட திமுகவை வீழ்த்த முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளாரே'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், ‛‛ஜெயலலிதா இருந்தபோது கூட்டணி எதுவும் இன்றி திமுகவை வீழ்த்தி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இது இன்றைய காலத்தில் முடியாது என நினைக்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்து வகையிலான கூட்டணியில் போராடினால் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் திமுகவை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற முடியும்.

கூப்பாடு போடும் அதிமுக
மேலும் தொலைக்காட்சிகளில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என கூறுகின்றனர். இதன்மூலம் அதிமுக பலவீனமாகி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பெரிய கட்சியான அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பது இருக்கும். தற்போது அந்த இடத்தை இழந்து விட்டால் தான் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என கூறி வருகின்றனர். இயற்கையாக இருந்த ஒரு விஷயத்தையே தினமும் கூப்பாடு போடும் நிலையில் அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தான் வேறு வழியின்றி அங்கு இருக்கிறார்கள். அந்த சின்னம் மட்டும் இல்லாவிட்டால் கலைந்து சிதைந்துவிடுவார்கள். ஏனென்றால் ரொம்ப பலவீனமாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications