"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த முன்னாள் சபாநாயகரும், சிட்டிங் எம்எல்ஏவுமான தனபால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார். இது கொங்கு மண்டலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விவரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்! என பதிவிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா, தனபாலை சந்தித்த புகைப்படத்தையும் போட்டிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவர் தற்போதைய தேர்தலிலும் போட்டியிட விரும்பி அதிமுக சார்பில் விருப்பமனு பெற்றிருந்தார்.
ஆனால் தலைமை 3 கட்டங்களாக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. முதலில் தனபாலின் தொகுதியான அவிநாசி, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. சரி வேறு எந்த தொகுதியாவது தனபாலுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அதுவும் இல்லை.
முன்னாள் சபாநாயகருக்கே இந்த நிலையா என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து நேற்றைய தினம் தனபால் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பமனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை கூட கட்சி சார்பில் என்னை அழைத்து சொல்லவே இல்லை.
அவிநாசி போய்விட்டதால் வேறு தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்று கூட அவர்கள் என்னை கேட்கவில்லை. சிட்டிங் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகரான எனக்கு சீட் வழங்கவில்லை, எனக்கு மரியாதையும் கொடுக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும் தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது அவர்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இதனிடையே தனபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அவிநாசி தொகுதியை தனக்கு தர வேண்டும் என லோகேஷ் முயற்சித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு சீட் கிடைக்காது என தெரிந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
தற்போது தவெகவில் ராசிபுரம் தொகுதி லோகேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நற்பண்பை சுட்டிக் காட்டி தனபால் போட்ட பதிவில், தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போதிலும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தன்னை சந்திக்கவில்லை என்பதை குத்தி காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications