எடப்பாடியை விடுங்க.. கூட்டணி உறுதியாகும் முன்பே ‘அமைச்சர்’ கணக்குடன் காய்நகர்த்தும் அதிமுக புள்ளிகள்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உருவாவதற்குள் டெல்லியில் சில முக்கிய புள்ளிகள் வேறு கணக்குகளுடன் காய்நகர்த்தி வருவதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சர் பதவியை குறி வைத்து அதிமுகவின் டெல்லி புள்ளிகள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
கடந்த வாரம் திடீரென டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறியது. இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
கூட்டணி தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்று தனியார் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் அமித் ஷா தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மனு அளித்ததாகக் குறிப்பிட்டார். கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என்றும், அதற்கு வசதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் அல்லது வேறு ஒருவர், பாஜக மாநிலத் தலைவராக விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
பாஜக ரெடி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவேண்டும் என்றால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் தூக்கிவிட்டு வேறொருவரை பாஜக தலைவராக நியமிக்க டெல்லி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தம்பிதுரை சந்திப்பு
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான தம்பிதுரை நேற்று சந்தித்துப் பேசி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான டெல்லி முகமாக அறியப்படும் தம்பிதுரை, நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சிவி சண்முகம்
இதற்கிடையே, ராஜ்யசா எம்.பி சிவி சண்முகம் பாஜக மேலிட தலைகளை சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்தச் சந்திப்புகளுக்கு பின்னணியில் அமைச்சர் பதவியை ஒட்டி காய்நகர்த்தல்கள் நடந்து வருவதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டால் இந்த முறை எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு வாங்கிவிட வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் திட்டமிட்டு காய் நகர்த்த தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தம்பிதுரை, சிவி சண்முகத்தின் முயற்சிகள் பார்க்கப்படுகின்றன.
மத்திய அமைச்சர் கனவு
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், தோல்வியைத் தழுவிய சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய இருவரும் தான் தங்கள் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது என்றார்கள். சி.வி.சண்முகம் பாஜகவை பல தருணங்களில் தாக்கிப் பேசியுள்ளார்.
சி.வி.சண்முகம் அதன் பின்னர் மாநிலங்களவை சீட் வாங்கி எம்.பியாகிவிட்டார். தொடர்ந்து டெல்லி சென்று வந்து கொண்டிருந்த அவர் தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்த உடன் எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று காய் நகர்த்துகிறார் எனத் தகவல்கள் பரபரக்கின்றன.












Click it and Unblock the Notifications