பூந்தமல்லி தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு.. அதிமுகவினர் சாலை மறியல்! பரபரப்பு
சென்னை: பூந்தமல்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்தற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
Recommended Video
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டன. நேற்று அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூந்தமல்லி தனித்தொகுதி அதிமுகவினருக்கு ஒதுக்கப்படும் என அதிமுகவினர் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் திடீர் திருப்பமாக பூந்தமல்லி தொகுதியை அதிமுக அதன் கூட்டணிக் கட்சியாக பாமக விற்கு ஒதுக்கியது. இதற்கு அதிமுக மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மணிமாறன்
பூந்தமல்லி முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்த நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நசரத்பேட்டையில் பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்,

பேச்சுவார்த்தை
இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லவில்லை.

கோஷங்கள்
இதனால் வேலைக்கு, கல்லூரி, பள்ளிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.. பூந்தமல்லி தொகுதி அதிமுகவினருக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.

போராட்டம்
அதிமுகவினரின் இந்த போராட்டத்தால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பூந்தமல்லி மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி, பல்லடம், செய்யூர், சாத்தூர் ஆகிய ஊர்களில் அதிமுகவினர் வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications