“பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்துபோகும்” அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இந்நிலையில், செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்துபோகும்" என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் திமுக, கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருந்ததோ அதே கட்சியுடன் இந்த முறையும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த முதல் ரவுண்ட் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் மறுபுறம், அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடன் சேர்ந்து களமிறங்கிய அதிமுக, இந்த முறை அக்கட்சியை கழற்சி விட்டிருக்கிறது. மட்டுமல்லாது பாஜக உடன் இனி கூட்டணியே இல்லை என அதிமுக தலைவர்கள் கறாராக கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் அழிந்துபோகும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "பாஜகவுடன் இனிமேல் எங்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணியும் இல்லை என்று சொல்லியிருக்கிறோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. அவர்கள் அணுகுமுறையை தமிழ்நாட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் செவி மடுக்கவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கூறினாலும், டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை. எனவேதான் அவர்களை விட்டு பிரிந்தோம்.
கடந்த 9 ஆண்டுகளில் அவர்கள் மாறுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் மாறவில்லை. எனவே, நாங்கள் மாறிவிட்டோம். இந்தியா கூட்டணி தலைவர்களை விட மோடியை எதிர்ப்பதில், எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக இருக்கிறார். இன்றைக்கும் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித்ஷா கூறுகிறார் எனில், அவர் கனவு உலகில் மிதந்துக்கொண்டிருக்கலாம். அதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும்?
கூட்டணி குறித்து அன்பாக அழைப்பதாகவும், மிரட்டுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். இவை இரண்டுக்கும் நாங்கள் செவி மடுக்க மாட்டோம். 5 வடமாநிலங்களை நட்போடு வைத்திருந்து, அவர்களை வைத்து கூட்டாட்சிக்கு வந்தார்கள் பாஜகவினர். பின்னர் இந்த நட்புகளை முதுகிலே குத்தி, வாயில் விஷத்தை ஊற்றி அவர்களை அழித்துவிட்டு அந்த 5 மாநிலங்களிலும் முழுமையாக இவர்களே ஆட்சியை பிடித்தார்கள். இப்படியான நயவஞ்சக கொள்கைக்கு சொந்தக்காரர்கள்தான் ஆர்எஸ்எஸ் பாஜக.
மோடிக்கும் பாஜகவுக்கும் இருக்கும் ஒரே நோக்கம், உலக அளவில் தமிழினம் அழிந்துவிட வேண்டும் என்பதுதான். திராவிடம் உலக அளவில் அழிந்துவிட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. இப்படியானவர்கள் அன்பு காட்டுகிறார்கள் என்பதை நாங்கள் எந்த காலத்திலும் நம்ப மாட்டோம். மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்.
எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த காலத்திலும் உறவு இருக்காது. இந்த நிலைப்பாட்டில் அணு அளவும் மாறமாட்டோம். அண்ணாமலை தன்னை வளர்க்கலாம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார். இது அவருக்கு தோல்வியைதான் தரும் என்பது போக போக தெரிந்துவிடும். மக்கள் இதயத்தில் பாஜகக்கு இடமில்லை. டெல்லியில் ஆட்சியை பாஜக கைபற்றிவிடும் என்கிற நினைப்பில், அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா என்கிற சலனத்தில் தமிழ்நாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன.
இப்படியான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் கூட, பாஜகவுடன் சேர்பவர்கள் அழிந்துவிடுவார்கள், ஒழிந்துவிடுவார்கள். என்னுடைய கணிப்பு ஒரு சீட் கூட அவர்களுக்கு கிடைக்காது. செல்லாக்காசுகள், தினகரனால் ஆயிரம் என்று மாறினாலும், சசிகலாவால் 5000 என மாறினாலும், ஓபிஎஸ்ஸால் 10,000 என மாறினாலும் செல்லாக்காசு செல்லாக்காசுதானே! செல்லாக்காசுகளை வைத்து பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. பாஜகவை வைத்து இந்த செல்லாக்காசுகளாலும் எதுவும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications