பேஸ்மேக்கர், எக்மோ சிகிச்சை..! ஜெயலலிதா இறப்பிற்கு உண்மையில் என்ன காரணம்? எய்ம்ஸ் பரபர அறிக்கை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்துள்ள அறிக்கை குறித்து இடம்பெற்றுள்ள சில முக்கிய கருத்துகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதைய தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016இல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகப் புகார்கள் கிளம்பிய நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் எய்ம்ஸ் இயக்குநரகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தவறு இல்லை
அதன்படி அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் 3 பக்க விசாரணை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக் குழு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள்
எய்ம்ஸ் மருத்துவக் குழு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் இந்த அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் ஆகும் முன்னரே நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, அதிக சர்க்கரை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்ததாகவும் அதற்குச் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாகவும் கூறப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் இருந்தபோதே ஜெயலலிதா திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பேஸ்மேக்கர் கருவி
ஜெயலலிதா வீட்டில் இருந்து 20.09.2016 அன்று ஆம்புலன்ஸ் கேட்டு அழைப்பு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்குச் சென்று மருத்துவ குழுவினர் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பல்வேறு மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் இதயத் துடிப்பைச் சீர் செய்யத் தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்குப் பொருத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

லண்டன் மருத்துவர்
லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவக் குழு அளித்த சிகிச்சை தொடர்பாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. இத்தனை சிகிச்சைக்குப் பின்னரும் டிசம்பர் 3இல் ஜெயலலிதா உடல் நிலை மோசமடைய தொடங்கியதாகவும், இதற்கு மறுநாள் டிசம்பர் 4இல் அவர் மூச்சுவிடவே பெரும் சிரம் பட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

எக்மோ சிகிச்சை
அதைத் தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டதாகவும் டிசம்பர் 5இல் உரிய மருத்துவ நடைமுறைகள் கடைப்பிடித்தே அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்ததை உறுதி செய்து ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஆறுமுகசாமி ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications