காற்று மாசு: உங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா?அண்ணாமலையை விமர்சித்த பூவுலகின் சுந்தர்ராஜன்
சென்னை: சென்னையில் காற்று மாசுவினால் ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், உங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா? என அண்ணாமலையை விமர்சித்து பூவுலகின் நண்பர் அமைப்பு தலைவர் சுந்தர்ராஜன் ட்விட் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி நேற்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை தமிழகத்திலும் களை கட்டியது.
மக்கள் புத்தாடை அணிந்து இனிப்பு பலகாரங்களை பரிமாறி பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.

தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகையால் நேற்று சென்னை உள்பட முக்கிய நகரங்கள் வண்ண வண்ண வான வேடிக்கைகளால் மிளிர்ந்தன. காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகளை 2 மணி நேரமே வெடிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், இதை யாரும் மதித்ததாக தெரியவில்லை. நேற்று முழுவதுமே பட்டாசுகளை வெடித்து தள்ளினர். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்கள் புகை மூட்டமாக காட்சி அளித்தன.

காற்று மாசு அதிகரிப்பு
நேற்று மாலையில் இருந்தே பனி படர்ந்தது போல சென்னை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னையில் மிகக்கடுமையாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களிலும் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டு இருந்தனர். அந்த வகையில், ஜெயஸ்ரீ மதிமாறன் என்பவர் தனது ட்விட்டரில் காற்று மாசு தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவிட்டு இருந்தார்.

பல குழந்தைகள் ஹாஸ்ப்பிடலில் அட்மிட்
தனது ட்விட் பதிவில், ''வருஷத்துல ஒரு நாள் வெடி வெடிச்சா ஒன்னும் ஆகாதுன்னு யாரோ ஒரு அரசியல் பிரமுகர் சொன்னாருதான? இன்னைக்குச் சென்னையோட காற்று மாசு காரணமாக பல கொழந்தைங்க மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. என் பொண்ணும் கூட.'' என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவை சுட்டிக்காட்டி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்துள்ளார்.

மனிதாபிமானம் இருக்கா
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ''உங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா அண்ணாமலை அவர்களே... இவர் சொல்வதை கேளுங்கள். ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் மாநிலத்தலைவருக்கு என பொறுப்பு இருக்கிறது, அதில் எதுவுமே இல்லையா உங்களுக்கு?'' என்று பதிவிட்டு உள்ளார். காற்று மாசு காரணமாக பட்டாசுகள் வெடிப்பதை குறைக்க வேண்டும் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

8 லட்சம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்
ஆனால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''சிவகாசியில் இதை நம்பி இருக்கும் 8 லட்சம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த முறை நிறைய பட்டாசுகளை வெடிப்போம். பட்டாசு வெடிப்பது என்பது நமது கலாசாரம். காற்று மாசுபாடு எல்லாம் ஒரு நாளில் பெரிதாக பார்க்க வேண்டாம். ஒரு நாளில் எதுவும் ஆக போவது இல்லை'' என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கடும் எதிர்வினையாற்றி இருந்தார். இந்த நிலையில் தான் காற்று மாசுபாடு தொடர்பாக அண்ணாமலையை டேக் செய்து தனது டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications