‛‛இது நல்ல அறிகுறி இல்லை’’.. அரசு பஸ்களுக்கு அபராதம் போடும் போலீஸ்! ஸ்டாலினுக்கு AITUC பரபர கடிதம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பிரச்சனையை தீர்க்க ஏஐடியூசி எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது காவல்துறை மற்றும் அரசு பஸ் போக்குவரத்து கழக பணியாளர்கள் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்த மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது எதுவென்றால் அது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடந்தது சம்பவம் தான்.

அதாவது கடந்த 21ம் தேதி நாங்குநேரியில் போலீஸ் சீருடையில் அரசு பஸ்சில் ஏறிய பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ்காரர் ஆறுமுகப்பாண்டி வாரண்ட் எதுமின்றி டிக்கெட் எடுக்க மறுத்தார். இதுதொடர்பாக அவருக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மேலும் அரசு பஸ்சில் பயணிக்கும் போலீசார் டிக்கெட் எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பான விவாதம் கிளம்பியது. இந்நிலையில் தான் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது போக்குவரத்து காவலர்கள் அரசு போக்குவரத்து கழக பஸ்களை வழிமறித்து நடத்துனர்கள், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
நோ பார்க்கிங்கில் பஸ்சை நிறுத்தியது, சீருடை சரியாக அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் காவல்துறை சார்பில் அரசு பஸ் போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாங்குநேரியில் நடந்த சம்பவம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் காவல்துறை இடையேயான மோதலாக உருவாகி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் ஏஐடியூசி எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு திட்டமிட்டே காவல்துறை அபராதம் விதித்து வருகிறது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு திட்டமிட்டு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ஒன்றிணைந்து போக்குவரத்து கழகத்துக்கு எதிராக செயல்படுகின்றனர். போக்குவரத்து தொழிலாளர் - காவல்துறை இடையிலான பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் விதிமீறலை தடுப்பதாக கூறி இத்தகைய நடவடிக்கையை தொடங்கியிருப்பத என்பது நல்ல அறிகுறியில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications