இப்படி நொறுங்கிப்போச்சே.. டீலில் விட்ட கூட்டணி கட்சி.. ஷாக் ஆகி பார்த்த ஓபிஎஸ்! என்ன முடிவெடுப்பாரோ?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடுவது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது ஒருபுறம் என்றால், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஓபிஎஸ் தரப்பை பொருட்டாகவே மதிக்காதது ஓபிஎஸ்ஸுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
அதிமுக கூட்டணியில் இருந்த தமாகவிடம் இருந்து தொகுதியைப் பெற்று எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் காய் நகர்த்தியுள்ளார். இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வந்தாலும் பரவாயில்லை என இறங்கியுள்ளார் ஈபிஎஸ்.
மற்றொரு பக்கம், கூட்டணிக் கட்சியான பாஜக தனியாக தேர்தல் குழு அமைத்திருப்பது கூட்டணிக்குள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே பாஜகவிடம் தங்கள் அணிக்கு ஓபிஎஸ்ஸும் ஆதரவு கேட்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த காரணத்தால் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமாகா திட்டம்
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெராவை எதிர்த்து போட்டியிட்ட த.மா.காவே மீண்டும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமாகாவும் அந்த எண்ணத்திலேயே இருந்தது. அதையொட்டியே ஓரிரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் வாசன். ஆனால் அதிமுகவின் முன்னணி தலைவர்களான ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் தமாகா தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்துப் பேசிய பிறகு எல்லாமே மாறியது.

காட்சிகள் மாறின
இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்தை அதிமுக மாஜிக்கள் ஜிகே வாசனிடம் வெளிப்படுத்தியுள்ளனர். அதிமுகவில் குழப்பம் நிலவி வரும் சூழலில், கட்சியை கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வருவதற்கும், தேர்தல் ஆணையத்தில் பிரச்சனையை தீர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தலில் அதிமுக நிற்பது தான் சரியாக இருக்கும். மேலும், இடைத்தேர்தலில் செலவும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் நின்றால் ஆளுங்கட்சி அணிக்கு வெற்றி எளிதாகிவிடும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசித்த வாசன் - யார் கையில்
இதற்கிடையே, தனது கட்சி நிர்வாகிகளிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி ஆலோசித்துள்ளார் வாசன். அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் - இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் ஆகிய காரணங்களால் நாம் தவிர்ப்பதுதான் நல்லது என்றும் வாசன் சொல்லி இருக்கிறார். நாம் ஓபிஎஸ்ஸிடம் பேசிப்பார்க்கலாம் என சில நிர்வாகிகள் சொன்னதற்கு, அது சரியாக வராது, அதிமுக எடப்பாடி பழனிசாமி கையில் தான் இருக்கிறது. ஓபிஎஸ் பக்கமும் நாம் கை நீட்டுவது கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும், இந்த சீட்டை விட்டுக்கொடுத்து, லோக்சபா தேர்தலில் நமக்கு சாதகமாக நடக்கும் வகையில் உறுதி செய்து விடுகிறேன் என்றும் கூறியிருக்கிறாராம் வாசன்.

அதிமுக பிளான்
இதையடுத்தே, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என த.மா.கா தலைவர் ஜிகே வாசன் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதனையடுத்து அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று சேலத்தில் ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில், ஆதரவு கேட்டு பாஜக நிர்வாகிகளை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. பாஜகவும் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் சூழல் தென்படும் நிலையில், பாஜகவின் முடிவு விரைவில் தெரியவரும்.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரட்டை இலை சின்ன விவகாரம், அதிமுக யாருக்கு என்கிற வழக்கு என அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் களம் இறங்க இருப்பதாகத் தெரிகிறது. ஈபிஎஸ் அணி களமிறங்குவதால், தனது நிலையை தக்கவைக்க தானும் களமிறங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ஓபிஎஸ். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் அணி ஜனவரி 23ஆம் தேதி முடிவு எடுக்கவுள்ளது. இந்நிலையில் இன்று ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி தலைமையில் தான் அதிமுக - வாசன்
அதிமுக போட்டியிடும் என ஜிகே வாசன் அறிவித்த நிலையில், ஒரு முன்னணி தொலைக்காட்சி ஜிகே வாசனை போனில் தொடர்புகொண்டு பேசியது. அப்போது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியுடன் மட்டுமே ஆலோசித்து அதிமுக போட்டியிடும் என்று அறிவித்து விட்டீர்களே.. ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் ஆலோசிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பியது. ஓபிஎஸ் சம்பந்தப்பட்ட கேள்வியை தவிர்க்க முயன்ற வாசன், பின்னர் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஷாக்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போராடி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு போட்டியாக இடைத்தேர்தலில் களமிறங்கும் திட்டத்தில் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்காத நிலை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும், ஈபிஎஸ், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கணிசமான வாக்குகளைப் பெற்றுவிடுவார். ஆனால், சுயேட்சை சின்னத்தில் தம்மால் சோபிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஓபிஎஸ் தரப்புக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசன், ஓபிஎஸ்ஸை பொருட்படுத்தாத வகையில் பேசியிருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் ஷாக் கொடுத்துள்ளது. பாஜகவிடம் தங்கள் அணிக்கு ஓபிஎஸ் ஆதரவு கேட்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications