விட்டாச்சு லீவ்.. தொடர் மழை காரணமாக.. இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,
முன்னதாக கடந்த வாரம் தான் இந்த வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்தது.

அதன் பின்னரும் கூட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளைய தினம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பிற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை... தத்தளிக்கும் பூந்தமல்லி.. நசரத் பேட்டையில் 500 குடும்பங்கள் தவிப்பு
இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (நவ 30) தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை இன்று (நவ 30) அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.