சனாதனம்.. திருமாவளவன் சீரியஸாக பேச.. ஹாயாக மொபைலில் கிரிக்கெட் பார்த்த அமைச்சர் பொன்முடி - வீடியோ
சென்னை: சென்னையில் நேற்று சனாதனம் ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சீரியஸாக பேசி கொண்டிருந்தபோது அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்து தனது செல்போனில் ஹாயாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை பார்த்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் சனாதானம் ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் நடத்தினர். நேற்று மாநாட்டின் இறுதி நாள் என்பதால் பல தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தொல் திருமாவளவன் சனாதன ஒழிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விஷயங்களை எடுத்துக்கூறி பேசினார். இந்த வேளையில், ‛‛எல்லாம் மாறி கொண்டே இருக்கும் நிலையில் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை தருவது தான் கம்யூனிசம். கம்யூனிசம் என்பது சனாதனத்துக்கு எதிரானது. கம்யூனிசத்தை புரிந்து கொண்டால் சனாதனத்தை புரிந்து கொள்ள முடியும். கம்யூனசத்துக்கு எதிரானது தான் சனாதானம். உழைப்பை சுரண்டக்கூடாது. அதிகாரம் ஒரு இடத்தில் குவியக்கூடாது. ஆதிக்கம், ஒடுக்குமுறை கூடாது என்பது தான் கம்யூனிசம். ஆனால் இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் சனாதனம் உள்ளது.
சனாதனத்தை தற்போது பார்ப்பனியர்கள் கையில் எடுத்து உள்ளனர். இதனால் சனாதனத்தை பார்ப்பனியம் என்கிறோம். சனாதனம் இந்த அரசியலமைப்பு சட்டம்தான் சமூக நீதியை தருகிறது. அதனை எழுதியவர் புரட்சியாளர் அம்பேத்கார். பல்வேறு நெருக்கடிகள் வந்தாலும் மதசார்பற்ற இந்தியா என்பதில் உறுதியாக இருந்து அரசிலமைப்பு சட்டத்தை வகுத்த கொடுத்தவர் தான் அம்பேத்கர்.

அரசியலமைப்பு சட்டம் என்பது சுதந்திரம், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை பேசுகிறது. இதனை மறுப்பது தான் சனாதனம். சனாதன தர்மம், இந்து தர்மம், மனு தர்மம் பிராமணர்களுக்கானது. அவர்களே உச்சநீதிமன்றம், உயர்கல்வி நிறுவனங்களில் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களே ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுகிறார்கள். இதனால் ஓபிசி மக்கள் அவர்களைதானே எதிரியாக பார்க்க வேண்டும்.
ஆனால் இந்திய சமூக கட்டமைப்பில், இந்து சமூக கட்டமைப்பில் அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஓபிசி சமூகத்தினர் இந்த மண்ணின் பூர்வ குடிகளான எஸ்சி, எஸ்டி சமூகத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். நாங்குநேரி, வேங்கைவயல், மேலவளவு படுகொலை உள்ளிட்டவற்றுக்கும் இதுதான் காரணமாக இருக்கிறது.
உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஓபிசி மக்களின் உரிமையை ஒருபோதும் எஸ்சி, எஸ்டி மக்கள் பறிப்பது இல்லை. இதனால் ஓபிசி பிரிவினர், பிரமண ஆதித்கத்தை எதிர்த்த நகர வேண்டும். அப்போதுதான் சனாதன ஒழிப்பு சாத்தியமாகும். ஓபிசி ஆரிய எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பை நோக்கி திரும்புகிறபோதுதான் இது சாத்தியமாகும்'' என ஆக்ரோஷமாக பேசினார்.
இந்த வேளையில் மேடையில் அமர்ந்திருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது செல்போனில் ஹாயாக கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தார். நேற்று ஆசியக்கோப்பைக்கான தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை தான் அமைச்சர் பொன்முடி தனது செல்போனில் பார்த்து கொண்டிருந்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications