அடி தூள்! "அனைவருக்கும் ஐஐடி" திட்டத்தில்.. சென்னை ஐஐடியில் படிக்க போகும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்
சென்னை: தரமான உயர்க் கவ்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் "அனைவருக்கும் ஐஐடி" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. கல்வி முறையை மேலும் மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
தரமான உயர்கவ்லி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

85 மாணவர்கள்
அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2021ஆம் ஆண்டு அனைவருக்கும் ஐஐடி- எம் என்ற திட்டம் முதல்முறையாகச் செயல்படுத்தப்பட்டது. இந்த 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் 20 மாவட்டங்களில் இருந்து 85 மாணவ- மாணவியருக்கு ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் நான்காண்டு படிப்பான பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (Data Science and Applications) பிரிவில் சேர ஆணைகள் அளிக்கப்பட்டு உள்ளது.

45 அரசுப் பள்ளி மாணவர்கள்
குறிப்பாக இந்த 85 மாணவ மாணவிகளில் 45 பேர் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவர். நேற்றைய தினம் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த மாணவர்களுக்குச் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், "ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் பட்டப்படிப்புக்குத் தகுதி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை நான் வாழ்த்துகிறேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக அரசு மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவும், குறைந்த விலையில் கல்வி கற்கவும், இதுபோன்ற அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொண்டதற்காக ஐஐடி மெட்ராஸ் நிர்வாகத்திற்கு நன்றி. அரசுப் பள்ளி மாணவர்களும் முதன்மை கல்வி நிறுவனங்களில் கல்வியைப் பெற வேண்டும் என்பதை எங்கள் நோக்கம். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஐஐடி நிர்வாகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என்றார்.

அனைவருக்கும் ஐஐடி
'அனைவருக்கும் ஐஐடிஎம்' (IIT Madras for All) திட்டத்தின் கீழ் 58 அரசுப் பள்ளிகளில் இருந்து 192 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ்-ல் 14 வாரங்கள் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இருந்து பிஎஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வை எழுத 68 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு இப்போது தேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

உதவித் தொகை
இந்த பிஎஸ் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. மேலும், தகுதியுடைய மாணவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியுடன் தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியைப் பெற முடியும். இங்கு பிஎஸ் பட்டம் பெற்ற மாணவர்கள் GATE தேர்வு எழுதத் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எம்டெக் படிப்பைத் தொடர முடியும்.

வேறுபாடு இல்லாமல் கல்வி
இது குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்பதுதான் 'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் நோக்கம். இப்போது முதல் பேட்ச் மாணவர்கள் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி. சமூக- பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்

மாணவர்கள் மகிழ்ச்சி
ஐஐடியில் இடம் கிடைத்தது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், "ஐஐடி குறித்து முதலில் எனக்கு எதுவும் தெரியாது. இத்திட்டத்தில் சேர்ந்த பின்னரே, ஐஐடி குறித்துத் தெரிந்து கொண்டேன். ஐஐடியில் படிக்க எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எதிர்பாராத ஒன்று. அரசுப் பள்ளி ஒன்றில் படித்த எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனது எதிர்காலத்தை நிச்சயம் மாற்றும்" என்றார்.












Click it and Unblock the Notifications