முதல்வராகும் ஆசை எனக்கில்லை.. ஆனால்.. அன்புமணி ராமதாஸுக்கு என்னாச்சு? ஏன் இப்படி சொல்கிறார்?
முதல்வராகும் ஆசை தனக்கில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஆகும் ஆசை எனக்கில்லை என பாமக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தருமபுரி தொகுதியில் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோற்றார்.
இதையடுத்து மாநிலங்களவை தேர்தலின்போது அன்புமணி ராமதாஸுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அது போல் அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி புதுவையுடன் சேர்த்து 39 இடங்களில் வென்றது.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி சார்பில் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மட்டும் வென்றார். இதைத் தொடர்ந்து நடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக 5 இடங்களில் வென்றது. எனினும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புற தேர்தலின்போது அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது.

ஈரோடு இடைத்தேர்தல்
அது போல் தற்போது நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவும் இல்லை. அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனிடையே பாமக பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய போது அதிமுக 4 ஆக உடைந்துள்ளது என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவால்தான் அன்புமணிக்கு எம்பி பதவி கிடைத்துள்ளது என்பதை மனதில் வைத்துப் பேச வேண்டும்.

பாமகவுக்கு அங்கீகாரம்
அதிமுக தயவு இல்லை என்றால் பாமக என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமே கிடைத்திருக்காது என கூறியிருந்தார். இதற்கு பாமக சார்பில் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கூறுகையில் அதிமுக வீழ்ந்த போது எல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பாமக மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
இந்த நிலையில் பாமக மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாறில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் பாமகவின் ஆட்சி, அதிகாரம் விரைவில் வரும். எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என தெரிவித்தார்.

என்எல்சி விவகாரம்
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் என்எல்சி தரகர் போல் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று காட்டமாக விமர்சித்தார். காவல்துறையை வைத்து அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருவதை தடுத்து நிறுத்தி 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி என ராமதாஸும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸும் கூறி வருகிறார்கள். அது போல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதற்கெல்லாம் நிதி ஒதுக்குவோம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிழல் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் ஒரே கட்சி பாமகதான். அப்படியிருக்கும் போது தற்போது முதல்வர் பதவி மீது தனக்கு ஆசையில்லை என அன்புமணி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை 2026 இல் பாமக ஆட்சிக்கு வர வேண்டும், ஆனால் முதல்வராக தங்கள் கட்சியில் உள்ள தகுதி வாய்ந்தவரை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு எனக்கு முதல்வராகும் பதவி வெறி இல்லை. ஆனால் பாமக ஆள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications