அமித் ஷா கிட்ட ஓடோடிய அண்ணாமலை.. பாஜகவில் திடீர்னு பரபரப்பு.. ஓஹோ இதுதான் விஷயமா.. ஆளுநர் ரவியுமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றிருக்கிறார்.. இந்த திடீர் பயணத்துக்கான காரணம் என்ன? இதுகுறித்த சில தகவல்கள் பரபரத்து காணப்படுகிறது.
தமிழக பாஜக தலைமை பொறுப்பினை ஏற்றதிலிருந்தே, அண்ணாமலை மீது மிகுந்த நம்பிக்கையை டெல்லி மேலிடம் வைத்திருப்பதாக தெரிகிறது.. பாஜகவில் கட்சிக்கு உள்ளேயும், கூட்டணியிலும், ஏகப்பட்ட சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்தபோதும், மேலிட தலைவர்கள் அண்ணாமலை மீது பெருத்த நம்பிக்கயை வைத்திருக்கிறார்களாம்.

லோக்சபா தேர்தலுக்கு முன்பே, "மாநில தலைமையை மாற்றுங்கள், அப்போதுதான் பாஜகவுடன் கூட்டணி" என்று அதிமுக தலைவர்கள் நேரடியாகவே டெல்லி சென்று புகார் தந்தார்களாம்.. அப்போதுகூட, அண்ணாமலை மீதான நன்மதிப்பை டெல்லி தலைவர்கள் குறைத்து கொள்ளவில்லையாம்.
சீனியர்கள்: பாஜகவில் எங்களை அண்ணாமலை ஒதுக்குகிறார், எங்களின் பெயர்கள்கூட, முன்புபோல மீடியாக்களில் வெளிவராமல் கமலாலயம் கவனமாக பார்த்து கொள்கிறது என்று தமிழக பாஜகவின் சீனியர்கள் சிலரே, டெல்லிக்கு புகார் கொண்டுபோனார்களாம். அப்போதுகூட, அண்ணாமலை மீதான நம்பிக்கையை மேலிட தலைவர்கள் குறைத்து கொள்ளவில்லையாம்.
அதிமுகவுடனான அண்ணாமலையின் போக்கு, கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அலர்ட் செய்தபோதுகூட, அண்ணாமலை மீது பெருத்த நம்பிக்கையை தலைவர்கள் வைத்திருக்கிறார்களாம்.
தலைவர்கள்: போதாக்குறைக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "நான் நீண்ட நாட்களாக அரசியலில் இருக்கிறேன். ஒருவரை பார்த்தாலே அவரைப் பற்றி சொல்லிவிட முடியும். அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் இல்லை, மொத்த இந்தியாவுக்கும் தலைவராக வருவார்," என்று பேசிவிட்டு போனதை தமிழக பாஜக மூத்த தலைவர்களும் கவனிக்காமல் இல்லை.
இதற்கெல்லாம் காரணம், தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி இருக்கிறது என்பதற்கான தோற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்துவதுடன், திராவிட கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதெல்லாம், டெல்லி தலைவர்களுக்கு பிடித்திருக்கிறதாம். அதனால்தான், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகும், தலைவராகவே அண்ணாமலை நீடிப்பதாக சொல்கிறார்கள்.
இதே போக்கில் பயணித்தால், வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தை பெறும் என்றும் வலுவாக நம்புகிறார்களாம்.
பரபரப்பு: இப்படிப்பட்ட சூழலில் திடீரென அண்ணாமலை இன்று டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பும் டெல்லி சென்றிருந்தார்.. அப்போது, நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக தலைமையிடம் விளக்கம் அளித்திருந்தார். இப்போது மறுபடியும் ஏன் டெல்லி சென்றிருக்கிறார் என்ற குழப்பமும் பரபரப்பும் கிளம்பியிருக்கிறது.
டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில், அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மாநில தலைவர்கள் சிலருடன் கட்சியின் தேசிய தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமித் ஷா: அதுமட்டுமல்ல, இந்த பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அண்ணாமலையுடன் தமிழக பாஜக நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது.
எனினும், இதுவொரு வழக்கமான சுற்றுப்பயணம்தான் என்கிறார்கள் பாஜகவினர்.. தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிப்பது இயல்பான விஷயம் என்பதால், மாநில தலைவர்கள் இதுபோல் டெல்லி செல்வார்கள்.
இங்கிலாந்து: அதுமட்டுமல்ல, சர்வதேச அரசியல் படிப்பை அண்ணாமலை படிக்க போகிறாராம்.. இந்த படிப்பை இங்கிலாந்து சென்று படிக்க வேண்டுமாம்.. இந்த படிப்பினை அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு 4 மாத காலமாகுமாம்.. அதனால் இங்கிலாந்து செல்வதற்கான அனுமதி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்..
ஆனால், இந்த பரபரப்புக்கு நடுவில், ஆளுநர் ரவியும் இன்று டெல்லிக்கு செல்கிறார்.. அதனால், கூடுதல் பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டுள்ளது.
ஏர்போர்ட்: முன்னதாக திடீரென டெல்லி செல்வது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அண்ணாமலை "செத்தாலும் இனிமேல் விமான நிலையத்தில் பேசமாட்டேன்.. முயற்சி செய்ய வேண்டாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
இப்படித்தான், கடந்த மாதமும் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications