அண்ணாமலை கொடுத்த ‛ஸ்பெஷல் கிப்ட்'.. நெகிழ்ந்துபோன நயினார் நாகேந்திரன்.. என்ன அது?
சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்கு பதில் அந்த கட்சியின் திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக இன்று பாஜகவின் தமிழக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை சார்பில் அவருக்கு ஸ்பெஷல் கிப்ட் வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். இவருக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக - அதிமுக கூட்டணி உடைந்தது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

ஆனால் இருகட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் தான் வென்றன. அதன்பிறகும் கூட பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
ஆனால் இருகட்சி தலைவர்கள் சந்தித்தனர். அதாவது திடீரென்று கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் அமித்ஷா வீட்டுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். இதன்மூலம் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் உருவாகிறது என்ற தகவல் வெளியானது.
இது நேற்று உறுதியானது. சென்னை வந்திருந்த அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி ஆகியோர் அமித்ஷாவுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் பாஜக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று அமித்ஷா அறிவித்தார். இதன்மூலம் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் உருவாகி உள்ளது.
மேலும் இந்த கூட்டணிக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில தலைவர் பதவிக்கு நேற்று நயினார் நாகேந்திரன் மட்டும் மனுத்தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் போட்டியின்றி மாநில தலைவராக தேர்வானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் மாநில தலைவராக தேர்வாகி உள்ள நயினார் நாகேந்திரனுக்கு, மாஜி மாநில தலைவர் அண்ணாமலை ஸ்பெஷல் கிப்ட் வழங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளார். அதாவது நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எச் ராஜா, வானதி சீனிவாசன், விபி துரைசாமி உள்பட 10 பேர் பரிந்துரை கையெழுத்து போட்டனர்.
முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கான படிவத்தில் கையெழுத்திடும்போதும் அண்ணாமலை தான் பயன்படுத்திய பேனாவை எடுத்து நயினார் நாகேந்திரனிடம் வழங்கினார். அதனை பரிசாக அண்ணாமலை வழங்கிய நிலையில் அதை வைத்து நயினார் நாகேந்திரன் கையெழுத்திட்டார். இதுபற்றி பத்திரிகையாளர் கேட்டபோது, ‛‛வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட அண்ணாமலை தனது பேனாவை எடுத்து தந்தார். அது அவரது பெருந்தன்மை. அவரது அன்புக்கு நன்றி'' என்றார்.












Click it and Unblock the Notifications