அசரலையே அண்ணாமலை.. தங்கநகை கொடுத்த "பாட்டிகள்".. அதைவிடுங்க, பிரியங்கா, ராகுலை மீண்டும் சீண்டிய பாஜக
சென்னை: தாலி விவகாரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, அதுகுறித்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸை மீண்டும் சீண்டி, தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
"பெண்களின் தாலியைக்கூட காங்கிரஸ் விட்டுவைக்காது" என பிரதமர் மோடி பேசிய பேச்சின் நெடி இன்னமும் அடங்கவில்லை... இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடனடியாக பதிலடி தந்திருந்தார்.

"போரின்போது என்னுடைய பாட்டி இந்திராகாந்தி நகைகளை நாட்டுக்காக கொடுத்தார். என் அம்மா, தாலியை இந்த நாட்டிற்காக தியாகம் செய்தார் என்று கூறியிருந்தார். உடனே இதற்கு கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பிரியங்காவுக்கு பதிலளித்திருந்தார்..
பாதுகாப்பு: அவர் பேசும்போது, "இந்திய சீன போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கியதாக கூறுகிறார்கள். 1962ல் சீன போர் நடந்ததற்கு காரணமே நேரு தான். இந்திரா காந்தி மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்து மக்களும் நகைகளை கொடுத்தனர். என் பாட்டி கூட நகையை கொடுத்திருக்கிறார்" என்றார்.
மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சானது, மிகப்பெரிய விவாதங்களை சோஷயல் மீடியாவில் கிளப்பி கொண்டிருக்கிறது.. "பாட்டி நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டதால் தான், சொத்து ஏதுமின்றி கோவைக்கு காலேஜில் சேர அண்ணாமலை வந்திருப்பாரோ?" என்ற கேள்விகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பதிலடி: மேலும் சிலரோ, "தாலியை அறுக்கும் கட்சி காங்கிரஸ் கிடையாது.. தாலி உட்பட தேசத்திற்காக கொடுத்த இயக்கம் காங்கிரஸ்.. தமிழ்நாட்டில் எல்லோருமே நகை கொடுத்தார்களா? அண்ணாமலையின் பாட்டி நகை கொடுத்தாரா? எந்த பேங்கில் நகை கொடுத்தார்? வட்டிக்கு கொடுத்தார்களா? வட்டிக்காக கொடுத்தார்களா? ஆனால், இந்திராகாந்தி தேசத்திற்காக மக்களுக்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்" என்று காங்கிரஸ்காரர்கள், அண்ணாமலைக்கு கட்சி பதிலடி தந்து கொண்டிருக்கிறது.
இப்படி பரபரப்பு விவாதங்களுக்கு நடுவில், தமிழக பாஜக மீண்டும் ராகுல், பிரியங்காவை சீண்டி கருத்து கூறியிருக்கிறது.. மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சுற்றுப்பயணம்: அப்போது, "தமிழகத்தில் பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணமும் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. இந்த 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பாஜக மேற்கொண்டுள்ளது... ஜுன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது கண்டிப்பாக தெரியும்.
மத்திய பாஜக அரசு, கடந்த 10 வருடங்களில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையயையும் செய்யவில்லை... வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டிருக்கிறார்கள்.. இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரியங்கா: பாஜக வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.. ராகுல் காந்தி- பிரியங்கா 2 பேருமே கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான்... இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று" என்றார்.. இதையடுத்து மீண்டும் காங்கிரஸ் தொண்டர்கள், சோஷியல் மீடியாவில் திரண்டு வந்து, தமிழக பாஜகவுக்கு பதிலடியை தந்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications