பாஜகவில் இருந்து விலகியது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த அண்ணாமலை.. டெல்லி மீது கடும் அதிருப்தி
சென்னை: பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து அண்ணாமலை முதன்முறையாக விரிவான விளக்கம் அளித்துள்ளார். தமிழக பாஜகவின் முடிவுகள் டெல்லியில் இருந்து எடுக்கப்பட்டதும், மாநில தலைவர்களுக்கு போதிய அதிகாரம் வழங்கப்படாததும் தனக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 2021ல் பாஜக மாநில தலைவர் பதவி தரப்பட்டது. அதன் பிறகு 2025 வரை 5 ஆண்டுகள் அவரே தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் முன்பு தான் அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அண்ணாமலை
அதன் பிறகும் கூட அவர் பாஜகவுடனேயே இணைந்து பயணித்தார். அதிருப்தி இருந்ததாக கூறப்பட்டாலும் கூட அவர் தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் கட்சியில் இருந்து விலகிய அவர், பின்னர் வீ த லீடர்ஸ் என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கினார். இதற்கிடையே இன்றைய தினம் ஆங்கில ஊடகமான இந்தியா டுடே நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவில் இருந்து விலகியது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் நீண்ட காலமாக அக்கட்சியின் தேசிய தலைமையுடன் இது குறித்து பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தமிழகம் மாற்றத்துக்கு தயாராக இருப்பதாக நான் உணர்ந்தேன். இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலம் இது. அவர்கள் புதிய ஆட்சி, புதிய சிந்தனைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த குரல்களை நாம் போதுமான அளவு கேட்கவில்லை என்று உணர்ந்தேன். தமிழகத்தின் அரசியல் சூழலை டெல்லியில் இருந்து மட்டும் அணுகுவது எப்போதும் சரியாக இருக்காது. டெல்லியில் அமர்ந்து தேசிய பார்வையில் ஒரு மாநிலத்தைப் பார்ப்பது எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது.
மாநில தலைவர்களுக்கு அதிகாரம் தேவை
நான் பாஜகவில் இருந்து விலக முக்கிய காரணமே டெல்லியை மையமாக கொண்ட முடிவெடுக்கும் முறை தான்! தமிழக அளவில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநில தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழக பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் நடத்தியது எனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு மாநிலக் கட்சியின் கோர் கமிட்டி கூட்டம் அந்த மாநிலத்தில் தான் நடைபெற வேண்டும். தமிழகத்துக்கான முடிவுகள் தமிழக மண்ணில் இருந்துதான் எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
பாஜக வாக்கு வங்கி
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டார். 39 லோக்சபா தொகுதிகளையும் உள்ளடக்கிய சுமார் 1,700 கி.மீ. நடைப்பயணத்தையும் அவர் மேற்கொண்டார். இதன் மூலம் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதத்தில் இருந்து 11 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாஜக தலைமையின் முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கருத்துக்கு மாறாக கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர், பாஜகவின் வாக்கு சதவீதம் மீண்டும் சுமார் 2.9 சதவீதமாக சரிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனது நோக்கம்
அவர் மேலும், "நான் பாஜகவில் இருந்து வெளியேறுவது குறித்து 2025 அக்டோபர்-நவம்பர் மாதங்களிலேயே தேசிய தலைமையிடம் தெரிவித்தேன். ஆனால் சட்டசபை தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பாஜகவில் தொடரும்படி கேட்டு கொண்டனர். தேர்தல் முடிந்த மே மாதமே மீண்டும் தலைமையை அணுகி, எந்தவித மோதலும் இல்லாமல் கட்சியில் இருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்தேன். அரசு பதவி அல்லது டெல்லியில் இருந்து செயல்படுவது எனது நோக்கம் அல்ல. கீழ் இருந்து புதிய அமைப்பை உருவாக்குவதுதான் எனது நோக்கம்" என்றார்.


Click it and Unblock the Notifications
