பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலை சட்டப்படிப்பை வழங்க முடியாது., ஹைகோர்ட்
சென்னை: இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என இந்திய பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம், சட்டப்படிப்புகளை வழங்க முடியாது எனவும், இந்த படிப்புகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சட்ட படிப்புகளை வழங்கும் போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications