சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்தூரி கைதாகிறார்? முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்
சென்னை: நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். கஸ்தூரி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் மீது குறித்து அவதூறு பேசியதாக கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி கூறினார். எனினும், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கஸ்தூரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது. நேற்று முன் தினம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். அதன்படி, கஸ்தூரி முன் ஜாமீன் கோரிய வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது.
இதில் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று முதல் வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நேற்று முன் தினம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று ஒத்திவைப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்து இருந்தார். மேலும் நீதிபதி, தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தார். நீதிபதி கூறுகையில், தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், மனுதாரர் தன்னை கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என தெரிவிக்கிறார். ஆனால் அவர் இப்படியொரு கருத்தை தெரிவித்தது ஏன்? என சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது செயலுக்கு கஸ்தூரி ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லையே ஏன்? மாறாக கஸ்தூரி பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அரசு தரப்பில், கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களுக்குப் பிறகு மனு மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுள்ளது.
இதற்கிடையே, தன்னை போலீசார் தேடுவதை அறிந்ததும் கஸ்தூரி தலைமறைவாகியுள்ளார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருப்பதால் போலீசார் தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வருகிறார்கள். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் நடிகை கஸ்தூரி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.












Click it and Unblock the Notifications