நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது- எம்.பி. டி.கே.ரங்கராஜன்
Recommended Video

சென்னை: நீட் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர். குறிப்பாக, நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்ததால், எண்ணற்ற மாணவர்கள் உரிய மதிப்பெண் பெற முடியாமல், வாய்ப்புகளை இழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மொழிபெயர்ப்பில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 196 மதிப்பெண்களை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் விதமாக அமைந்தது.

ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, சிபிஎஸ்இ (மத்திய கல்வி வாரியம்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆங்கிலத்தில் தேர்வு எழுவது அவசியம் என்று கூறி, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு, மீண்டும் இன்று (22.11.2018) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீட் தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டுமென்றும் ஆங்கிலம் அவசியம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பினால், மருத்துவராக வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கனவு கலைந்து போயிருக்கிறது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிற காரணத்தினால் தான், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாநில அரசும் எந்த அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு தரவில்லை. இதனால், நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவ-மாணவிகளின் கனவு கானல் நீரானது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தரப்பட்ட வினாத்தாளில் மொழிபெயர்ப்பு முற்றிலும் தவறாக இருந்தது, அதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்; அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட போதிலும், ஆங்கிலத்திலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது மாநில மொழிகளை புறக்கணிக்கும் விதத்தில் நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க மறுத்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக்கொண்டு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாதாடாதது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனால், தமிழில் நீட் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இப்போதாவது, நீட் தேர்வை தமிழில் எழுதுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு உடனடியாக பொருத்தமான முறையில் வினையாற்ற வேண்டும். மேலும், நீட் தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழில் தேர்வு எழுதுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; இந்தப் பிரச்சனையில் தமிழக மாணவர்களின் நலன்களை பாதுகாக்க, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications