ஒரே ஐபி அட்ரஸ்.. இருவர் போட்டி போடுவது போல் கணக்கு காட்டி 130 டெண்டர்கள்.. அறப்போர் இயக்கம் பகீர்!
சென்னை: ஒரே கணினியில் ஒரே ஐபி அட்ரஸ், ஒரே போன் நம்பரை கொடுத்து இருவர் போட்டி போடுவது போல் கணக்கு காட்டி ஒருவரே டென்டர் எடுத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ 811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வருகிறது.
எஸ் பி வேலுமணி உள்பட 8 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒரே ஐபி அட்ரஸை பயன்படுத்தி 130 டெண்டர்கள் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த சோதனை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுனேயே நடக்கிறது. இதுதான் விசாரணையின் ஆரம்பம் என சொல்லலாம். நாங்கள் 2018 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் சாராம்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதிகார துஷ்பிரயோகம்
அதில் மிக முக்கியமாக எஸ் பி வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவரது சகோதரர் எஸ் பி அன்பரசனின் நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர்களை வாங்கி கொடுத்துள்ளார். எஸ்பி வேலுமணியின் சகோதரர் இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரே ஐபி அட்ரஸ், ஒரே போன் நம்பர் கொடுத்து இருவர் போட்டியிடுவது போல் காண்பிப்பார்கள்.

செயற்கையாக இருவர்
ஆனால் ஒருவர் மட்டுமே டெண்டர் எடுக்கக் கூடிய முறையில் செயற்கையாக இருவர் எடுப்பது போல் காட்டி ஒருவரே எடுத்துள்ளார். இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் பார்த்தனர். வேலுமணியின் உறவினர் சந்திரசேகரின் வடவள்ளி வீட்டிலும் தற்போது சோதனை நடைபெறுகிறது. இந்த நபருக்கு சொந்தமான கேசிபி பிரைவேட் லிமிடெட், வரதன் உள்கட்டமைப்பு நிறுவனங்கள், இந்த நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ் அவருக்கு சொந்தமான ஏராளமான நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை மாநகராட்சிகள்
இந்த நிறுவனங்கள் சென்னை, கோவை மாநகராட்சிகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கான டெண்டர்களை முறைகேடாக ஒரே ஐபி அட்ரஸை வைத்து போடப்பட்டு அடுத்தடுத்து டெண்டர்கள் போடப்பட்டுள்ளதால் ஊழலுடன் நிறைய வரிப்பணம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பை விட அதிகமாக டெண்டர் போட்டு எடுத்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்களையும் புகாரில் இணைத்துள்ளோம்.

தகுதியே இல்லை
எந்தவித தகுதியும் இல்லாமலேயே வரதன் இன்பிராஸ்ட்ரக்சர் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எஸ் பி வேலுமணி தனது சகோதரர் மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்துகளை சேர்த்துள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெய்டு மூலம் மேலும் பல ஆவணங்கள் சேர்க்கப்பட்டு விசாரணையானது துரிதமாக நடைபெறும்.

புகாரில் இருக்கும் விஷயங்கள்
இந்த எஃப்ஐஆரில் இருக்கக் கூடிய ஒவ்வொன்றும் எங்கள் புகாரில் இருக்கக் கூடிய ஒன்றுதான். கோவை மாநகராட்சியில் எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பரசனும் , அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜன் ரத்தினசாமி ஆகியோர் 47 டெண்டர்களை ஒரே ஐபி அட்ரஸில் அடுத்தடுத்து டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. கேசிபி என்ஜினியர்ஸ், வரதன் உள்கட்டமைப்பு, கான்ஸ்டானிக் ஆகிய 3 நிறுவனங்களும் அவர்களுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கான டெண்டர்களை சென்னை, கோவை மாநகராட்சியில் முறைகேடாக எடுத்துள்ளதையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
Recommended Video

ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பு
மிக அதிகமாக டெண்டர்களை எப்படி எடுத்துள்ளார்கள் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக கொடுத்துள்ளோம். கடந்த ஜூலை மாதம் திமுக அரசால் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் சென்னை மாநகராட்சியில் எப்படி முறைகேடு செய்தார்கள் என்பது குறித்து எங்கள் இயக்கம் தெரிவித்திருந்த விஷயங்களை உறுதி செய்துள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள், எஸ் பி வேலுமணி, ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளோம். சென்னை மாநகராட்சியில் 2018 ஆம் ஆண்டு சாலை, மழைநீர் வடிகால் திட்டங்களில் ரூ 740 கோடிக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் குறித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். மின்சார வாரியம், உணவுத் துறை ,சுகாதாரத் துறை ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து புகார்கள் கொடுத்துள்ளோம். அடுத்தடுத்து எஃப்ஐஆர் போடப்படும் என தெரிகிறது என்றார் ஜெயராமன்.

லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்
இது போல் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை எஸ் பி வேலுமணியின் சகோதரர் 47 டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. அது போல் எஸ் பி பில்டர் நிறுவனத்துக்கு கோவை மாநகராட்சியில் 131 டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் கே சி பி என்ஜினியர் நிறுவனத்திற்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 130 டெண்டர் விடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் வேலுமணியின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தின் சொத்து மதிப்பு 967 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications