5ல் 3 மண்டலங்களை அலேக்காக அள்ளிய தவெக.. மண்டல வாரியாக எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்?
சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காவிரி டெல்டா, தெற்கு மண்டலம் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் அதிக சீட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது தவெக. மண்டல வாரியாக கட்சிகள் பெற்றுள்ள சீட்கள் விவரங்களைப் பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. மொத்தமுள்ள 57 தொகுதிகளில் 27 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது. வடக்கு, சென்னை மண்டலங்களையும் கைப்பற்றி உள்ளது திமுக.

கொங்கு மண்டலம்
கோவை மாவட்டம்: கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தவெக 6 இடங்களைப் பிடித்து பலமான முன்னிலையில் உள்ளது. திமுக 3 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டம்: ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் தவெக 5 இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிமுக 3 இடங்களைப் பெற்றுள்ளது. திமுக இங்கு 0.
நாமக்கல் மாவட்டம்: நாமக்கல்லில் தவெக கிட்டத்தட்ட முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 5-ல் தவெகவும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
திருப்பூர் மாவட்டம்: திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளில் தவெக 4 இடங்களைப் பிடித்துள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 2 இடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
சேலம் மாவட்டம்: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில், 11 தொகுதிகளில் அதிமுக 7 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டது. தவெக இங்கு 4 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
கரூர் மாவட்டம்: கரூரில் உள்ள 4 தொகுதிகளில் தவெக 2 இடங்களையும், திமுக மற்றும் அதிமுக தலா 1 இடத்தையும் பெற்றுள்ளன.
தெற்கு மண்டலம்
தெற்கு மண்டலத்தில் தவெக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவியது. தெற்கு மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பத்து மாவட்டங்கள் உள்ளன. அந்த பத்து மாவட்டங்களில் 58 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன.
இந்த தெற்கு மண்டலத்தில் கடந்த முறை திமுக 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றது. அதிமுக 18 தொகுதிகளில் வெற்றிக்கண்டது. இந்த தேர்தலில் திமுக தெற்கு மண்டலத்தில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தவெக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் திமுக எப்போதும் வலுவாக இருக்கும். ஆனால் இம்முறை புதிதாக களமிறங்கிய தவெக டஃப் ஃபைட் கொடுத்துள்ளது.
காவிரி டெல்டா மண்டலம்
டெல்டா மண்டலத்தில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ளன. டெல்டா மண்டலம் திமுகவின் கோட்டை என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் அந்தக் கோட்டையிலும் ஓட்டையைப் போட்டுள்ளது தவெக. காவிரி டெல்டா மண்டலத்தில் திமுக 26 தொகுதிகளிலும், தவெக 13 தொகுதிகளிலும் அதிமுக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
வடக்கு மண்டலம்
தமிழக வடக்கு மண்டல தேர்தல் நிலவரப்படி, சென்னை தவிர்ந்த 53 தொகுதிகளில் திமுக வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம், தவெக 28 இடங்களில் வெற்றி பெற்று பலத்தை நிரூபித்துள்ளது. வடதமிழகத்தில் அதிமுக 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மண்டலம்
சென்னை மண்டலத்தில் கடந்த முறை திமுக 16-க்கு 16 என வொயிட் வாஷ் செய்திருந்த நிலையில் இந்த முறை தவெக தட்டித் தூக்கியுள்ளது. துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றுள்ளது. கொளத்தூர் உட்பட 14 தொகுதிகளை தவெக வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications