"4".. இனிதான் சிக்கலே.. அதிர வைத்த நிதியமைச்சர் "பிடிஆர்" பதவி.. திமுகவை விடுங்க.. பாஜகவை பாத்தீங்களா
சென்னை: பிடிஆருக்கு புதிய துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து, பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி கொண்டிருக்கின்றன.. மற்றொருபக்கம், எதற்காக பிடிஆரின் துறை மாற்றப்பட்டது? என்பது குறித்த யூகங்களும் கிளம்பி உள்ளன. இன்னொரு பக்கம் பிடிஆருக்கான ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன.
பிடிஆர் பதவி மாற்றம் பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. ஒருபுறம் கட்சி ரீதியாக, மறுபுறம் மதுரை மாவட்ட ரீதியாக, மறுபுறம் எதிர்க்கட்சிகள் ரீதியாக என 3 வகைகளில் கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.
பிடிஆரை பொறுத்தவரை நிறைய படித்தவர்.. அதுவும் வெளிநாட்டில் படித்தவர்... திமுக அரசு பொறுப்பேற்றதுமே நியமிக்கப்பட்ட அமைச்சரவையில், அதிக அளவு பேசப்பட்டவரும், தற்போது பேசப்பட்டு கொண்டிருப்பவரும் அநேகமாக பிடிஆராகத்தான் இருக்கும்..

மத்திய அரசையும், முந்தைய அதிமுக அரசையும் ஏராளமான கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டவரும் பிடிஆராகத்தான் இருக்க முடியும்.. அந்த அளவுக்கு இவரது செயல்பாடுகள் மக்களை கவனிக்க வைத்தன...
சிறப்பான துறை: இந்த 2 ஆண்டுகளுமே மிக சிறப்பாக தன் துறையை கொண்டு சென்றவராகவே இப்போதுவரை கருதப்படுகிறார்.. வருவாய் ஈட்டுவது, கடனை குறைப்பது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்ற பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி, நேரடியாகவே அவைகளை கண்காணித்தவர்.. இவைகளுடன் ஆளுநர் மாளிகையின் செலவீனத்தில் கணக்கு கேட்டதும் இணைந்து கொண்டது, பிடிஆருக்கான நெருக்கடியை உருவாக்கியது..
கடைசியில், உறுதிப்படுத்தப்படாத ஆடியோ விவகாரத்தில் வந்து விவகாரம் முடிந்தது. தமிழக நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டுள்ளார்.. அது தொடர்பான கருத்துக்களும் இன்னமும் சோஷியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றன. பெரும்பாலானோர் சொல்லிவருவது, பிடிஆரை பதவியில் இருந்து மாற்றக்கூடாது என்பதுதான்..
காரணம், அனுபவமும் திறமையும் உள்ள பிடிஆரை, ஸ்டாலின் மாற்றியுள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு தெம்பை தந்துவிடும்.. குறிப்பாக அண்ணாமலைக்கு தெம்பை தந்துவிடும்.. அத்துடன், பரவிவந்த ஆடியோ வதந்திகளும் உண்மை என்ற தோற்றத்தையே ஏற்படுத்தும்..

அனுபவம் அதிகம்: எல்லாவற்றிற்கும் மேலாக திறமையான ஒரு நிதியமைச்சரை திமுக அரசு இழக்க நேரிடும். அதனால், பிடிஆரின் பதவி பறிக்கக்கூடாது என்றே கருத்துக்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன. எனினும், பிடிஆர் பதவிமாற்றத்துக்கான காரணங்கள் என்ன என்பதையும் சிலர் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அந்தவகையில், மதுரை மாவட்ட திமுகவில் இருந்துதான் அதிருப்தி குரல்கள் வெடிக்க துவங்கியதாகவும் சொல்கிறார்கள்.
இங்கு நடந்த மேயர் தேர்தலில், அமைச்சர் பி.மூர்த்தி, பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் முன்நிறுத்திய வேட்பாளர்கள், ஓரங்கட்டப்பட்டு, பிடிஆர் முன்நிறுத்திய வேட்பாளரான இந்திராணியையே கட்சித்தலைமை மேயராக்கியபோதே இந்த அதிருப்தி வெளிப்பட்டதாக சொல்கிறார்கள்..
இதனால், மாநகராட்சி நிர்வாகத்திலும் அவர்கள் யாரும் தலையிடாமலேயே இருந்து வந்ததால், மாநகர திமுக நிர்வாகிகளுக்கும், பிடிஆர் தரப்புக்கும் இடையே அதிருப்திகள் வெடித்ததாக தெரிகிறது.. அதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் இந்த அதிருப்தி வெளிப்படையாகவே தென்பட்டது.
சங்கடங்கள்: அதேபோல, துறை ரீதியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும், மூத்த அமைச்சர்களுடன் முரண்பாடு இருந்ததாக சொல்கிறார்கள்.. நிதி சிக்கனம் என்ற காரணத்தை பிடிஆர் தரப்பில் சொன்னாலும், சில சீனியர்கள் அதை ஏற்கவில்லையாம்.. இதற்கு நடுவில், அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் நீடித்த பிரச்சினையும், சேர்ந்து கொண்டது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு எதிராக நிதியமைச்சர் பேசியதாக சொல்லி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிக்கைகளும் வெளியாகி வந்தன.. இப்படிப்பட்ட சூழலில் ஆடியோ விவகாரமும் சேர்ந்துகொள்ளவும்தான், பிடிஆர் பதவி மாற்றப்பட்டதாக கூறுகிறார்கள்.
தற்போது தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டிருப்பதால், திமுகவில் அவரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் திமுக தரப்பில் இருந்தே சிலர் எழுப்பியும் வருகிறார்கள்.. எப்படி பார்த்தாலும் கட்சி ரீதியாகவும்சரி, துறை ரீதியாகவும் சரி, பிடிஆருக்கான முக்கியத்துவம் குறைந்தே இருப்பதாகவும், திறமையான நிதியமைச்சரை திமுக இழந்திருக்கக்கூடாது என்றும் பொருமல்கள் வெடித்தபடியே உள்ளன..

குஷி பாஜக: ஆனால், பாஜக தரப்போ குஷியில் உள்ளது.. பிடிஆரின் பதவி மாற்றத்துக்கு காரணமே அண்ணாமலைதான் என்ற ரீதியில் சோஷியல் மீடியாவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறது. அத்துடன், இதை ஒரு சாதனையாகவே கருதி புளகாங்கிதம் அடைந்து வருகிறது.
இதனிடையே, பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட்டையே பதிவிட்டிருக்கிறார்.. அதில், "பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் நிதி மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க தவறி விட்டார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லையெனில், 30,000 கோடி விவகாரம் உண்மை தான் என்று மக்கள் உறுதியாக நம்புவார்கள். தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது தகுதியுள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தை தவறென்று சொல்வாரா?" என்று திமுக தரப்பை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இதற்கு பதில் என்ன?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
இதனிடையே, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், விரைவில் அதிமுகவில் சேர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது, அதற்குமேல் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ள நிலையில், தான் நிதித்துறை அமைச்சராக இருந்த இரண்டு ஆண்டுகள் தன் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகள் என பிடிஆர் உருக்கமாக தெரிவித்துள்ளது, ஜெயக்குமாரின் யூகங்களை தவிடுபொடியாக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications