"அஸ்தமனம்".. அதிமுகவில் நடந்த "அந்த" சம்பவம்.. ஒன்றாக குறி வைக்கும் திமுக + பாஜக.. என்ன ஆகுமோ?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் முடிவிற்கு வராத நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கசப்பு.. அதிர்ச்சி.. ஏமாற்றம்.. அதிமுக தொண்டர்களின் மனநிலை தற்போது இப்படித்தான் இருக்கும். திமுக பக்கம் வலிமையாக ஆட்சி செய்து இருக்கிறது. வெறும் 4 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்டிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் 60+ எம்எல்ஏக்கள் இருந்தும், பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அதிமுகவால் எதிர்க்கட்சி போல செயல்பட முடியவில்லை. காரணம் உட்கட்சி மோதல். எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நிலவும் மோதல் காரணமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ளது.
“துரோகிகளை” தூள் தூளாக்குவோம்! திமுக டூ 2024 தேர்தல்.. முழு “ப்ளான்” - உறுதிமொழியில் உடைத்த எடப்பாடி

அதிருப்தி
இதனால் அதிமுகவிற்கு உள்ளே தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்கவில்லை. வீம்புக்கு மோதிக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன் ஓ பன்னீர்செல்வம்தான் . ஜெயலலிதா சிறைக்கு சென்ற போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது ஓ பன்னீர்செல்வம்தான். அப்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வத்தைதான் ஜெயலலிதா தேர்வு செய்தார், என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிமுக 60+ இடங்களை வெல்ல எடப்பாடிதான் காரணம். அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் கட்டிக்காத்தது எடப்பாடிதான். அதனால் அதிமுகவை வழி நடத்தும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது, என்று அவரின் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மோதல்
இவர்களுக்கு இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் அதிமுகவில் தொண்டர்கள் பலர் சோர்வடைய தொடங்கி உள்ளனர். எடப்பாடி - ஓபிஎஸ் மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பாஜக ஸ்கோர் செய்துவிடுகிறது. நாம் இவ்வளவு இடங்கள் வென்று இருக்கிறோம். மக்கள் நமக்கு மரியாதையான தோல்வியை கொடுத்து உள்ளனர். அதை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் தலைமையில் இருப்பவர்கள் இப்படி ஈகோவுடன் மோதுவது சரி கிடையாது என்பது நடுநிலை அதிமுக தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

கோவை செல்வராஜ்
இந்த நிலையில்தான் கோவை செல்வராஜ் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறினார். அதோடு மொத்தமாக அதிமுகவில் இருந்தும் வெளியேறுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஒற்றை தலைமை மோதலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவில் தலைவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கோவை செல்வராஜ் தீவிரமாக கருத்து தெரிவித்து வந்தார். ஆனால் அவரே தற்போது அதிமுகவில் இருந்து விலகி இருக்கிறார். இவர் திமுகவில் இணைய போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளன.

மோதல்
அதிமுகவில் கோவை செல்வராஜ் என்று இல்லை.. ஏகப்பட்ட நிர்வாகிகள் பலர் இப்படி அப்செட்டில் இருக்கிறார்கள். எடப்பாடி அணி, ஓ பன்னீர்செல்வம் அணி, இரண்டு அணிக்கும் செல்ல விரும்பாமல், அதிமுகவில் இருந்தே வெளியேறும் எண்ணத்திற்கு ஏகப்பட்ட நிர்வாகிகள் வந்துவிட்டனர். அதிமுகவில் இரண்டு டாப் தலைகளும் சண்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், அடுத்த 1 வருடத்திற்கு எப்படியும் சண்டை நடக்கும். இவர்களுக்கு கீழ் இருந்தால் கண்டிப்பாக எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கட்சி நிர்வாகிகள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர்.

திமுக + பாஜக
இந்த நிலையில்தான் அதிமுகவில் அப்செட்டில் இருக்கும் நிர்வாகிகளை திமுக + பாஜக இரண்டும் குறி வைத்துக்கொண்டு இருக்கிறதாம். உதாரணமாக தற்போது கோவை செல்வராஜை கட்சி பக்கம் இழுக்க திமுக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறதாம். இன்னொரு பக்கம் அதிமுகவில் தென் மண்டலத்தை சேர்ந்த முக்கியமான மாஜி எம்எல்ஏ ஒருவர் திமுகவில் இணைவதற்காக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. விருதுநகரை சேர்ந்த அந்த மாஜி எம்எல்ஏ அதிமுகவில் இருந்தால் நமக்கு எதிர்காலம் இல்லை. திமுகவிற்கு போய்விட வேண்டியதுதான் என்று திமுகவின் விருதுநகர் தலைகளிடம் போனில் பேசி இருக்கிறாராம். திமுகவும் இவருக்கு.. சீக்கிரம் சேர்ந்துக்குறோம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளதாம்.

பாஜக
இவரை இழுக்க வேண்டும் என்று திமுக முன்பே முயன்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக மோதல் காரணமாக அந்த மாஜி எம்எல்ஏவே அணி மாறுவதால்.. ஆபரேஷன் சக்ஸஸ் என்று திமுக விருதுநகர் தலைகள் குஷியில் இருக்கிறார்களாம். அதேபோல் மாஜி அமைச்சர் ஒருவரை தங்கள் கட்சிக்கு கொண்டு வர பாஜகவும் தீவிரமாக முயன்று வருகிறதாம். மாஜி அமைச்சர் ஒருவர் திடீரென பாஜகவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த அதிமுக மாஜி அமைச்சர் மீது தமிழ்நாடு அரசு பல்வேறு வழக்குகளை போட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ரெய்டுகள் அவரின் வீட்டில் நடைபெற்றது. ரெய்டு காரணமாக இவர் மீது வழக்குகள் போடப்பட்டன. அதோடு இல்லாமல் வேறு சில வழக்குகளும் அந்த மாஜி அமைச்சர் மீது உள்ளன. இந்த மாஜி அமைச்சர் அதிமுகவில் எடப்பாடி அணியில்தான் இருக்கிறார். ஆனாலும் எடப்பாடிக்கு நெருக்கம் கிடையாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு மறைமுக சப்போர்ட் என்றால் அதுவும் கிடையாது. இந்த நிலையில் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள இவர் பாஜகவில் ஐக்கியம் ஆக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.