கருணாநிதியின் மாப்பிள்ளை! வாஜ்பாயின் செல்லப்பிள்ளை! அரசியல் ராஜதந்திரி முரசொலி மாறன் பிறந்தநாள்!
சென்னை: கருணாநிதியின் மூளை என வர்ணிக்கப்பட்ட மறைந்த முரசொலி மாறனின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
முரசொலி மாறன் என்றாலே அவர் கோபக்காரர் எப்போதும் முகத்தை கடுகடுவென வைத்திருப்பார் என்பது தான், அவரை பற்றி திமுகவினர் கட்டமைத்த பிம்பமாகும். அரசியல்வாதிகளில் இவர் ஒரு அபூர்வமானவரும் கூட. சிபாரிசு கேட்டு வருபவர்கள் தன் முன்னால் தலையை சொரிந்து கொண்டு நிற்பது, வளவளவென பேசி இழுப்பது, புகழ்வது இவருக்கு துளியும் பிடிக்காது.

எதுவாகினும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இருக்க வேண்டும் என விரும்புபவர் மாறன். அதேபோல் உதவிக்கேட்டு செல்பவர்களிடம் காரியம் ஆகும், ஆகாது என்பதை அந்த நிமிடத்திலேயே சொல்லக்கூடியவர். அதைவிடுத்து செய்ய முடியாத காரியம் எனத் தெரிந்தும் செஞ்சிடலாம், பார்த்துக்கலாம் எனக் கூறி போலி நம்பிக்கை தரமாட்டார்.
எந்த ஒரு பணியையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என நினைத்தவர் முரசொலி மாறன். ரயில்நிலையம், விமான நிலையம் என எங்கும் தன்னை வரவேற்க, வழியனுப்ப யாரும் வரவேண்டாம் என கட்சிக்காரர்களிடம் கண்டிப்பு காட்டியவர் முரசொலி மாறன். அதேபோல் திமுக எம்.பி.க்களிடமும் கூட்டத்தை கூட்டிக்கொண்டு சுற்றாதீர்கள் என உரிமையோடு அறிவுறுத்தச் செய்வார்.
மத்திய அமைச்சராக இருந்த இவர் தனது துறை சார்ந்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தவர். தன்னுடன் இருக்கும் அதிகாரிகளும் அதேபோல் இருக்க வேண்டும் என நினைத்தவர். முரசொலி மாறனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வேறு துறைகளுக்கு பணிமாறுதல் பெற்றுச்சென்ற அதிகாரிகள் ஏராளம். அந்தளவுக்கு கோப்புகளை தேங்கவிடாமல் அதன் மீது உடனடி நடவடிக்கைகளை எடுப்பார்.
திமுகவும் பாஜகவும் இன்று எதிரும் புதிருமாக இருந்தாலும் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவில் இடம்பெற்றவர் முரசொலி மாறன். கூட்டணிக் கட்சி பிரமுகர் என்பதை கடந்து முரசொலி மாறன் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தார் வாஜ்பாய். மாறனின் ஒளிவுமறைவற்ற பேச்சும், நிர்வாகத் திறனும் வாஜ்பாயை பெரியளவில் ஈர்த்தன.
முரண்டுபிடிக்கிறார் மாறன் என பலரும் அவரை பற்றி புகார் கூறியும் நாட்டிற்கு எது நல்லதோ அதை அவர் செய்வார் என பாராட்டுச் சான்றிதழ் அளித்தார் வாஜ்பாய். இப்படி பல குணாதிசயங்களை கொண்ட முரசொலி மாறனுக்கு இன்று 90வது பிறந்தநாள் ஆகும்.












Click it and Unblock the Notifications