ரயில்வே திட்டத்திற்கு நிலம் தராத தமிழக அரசு.. ஆனா பாருங்க நிதி கொடுத்திருக்கோம்! - அஸ்வினி வைஷ்ணவ்!
டெல்லி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு என இரண்டு அதிவேக ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இது குறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரயில் திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த ரூ.5.98 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக 7 புல்லட் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் 2 வழித்தடங்கள் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
"பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 9 மடங்கு அதிகம். சென்னை இருந்து பெங்களூருக்கும், சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கும், 2 புல்லட் ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மறுபுறம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தருவதில் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.
குறிப்பாக மன்னார்குடி-பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர்-மன்னார்குடி ரயில் திட்டங்களுக்கு இன்னும் நிலம் கையகப்படுத்தவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டி காட்டி இருந்தார்.
புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து, பெங்களூருக்கு 1.13 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று அமைச்சர் கூறியிருந்தார். தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்காக 2009 தொடங்கி 2014 காலகட்டம் வரை, ஆண்டுக்கு சராசரியாக ரூ.879 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 9 மடங்காக நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது.
புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு, 2.55 மணி நேரத்தில் செல்ல முடியும். நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான உள்பட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம் இருக்கிறது. இது குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலியில் 352 கிலோமீட்டர், மகாராஷ்டிராவில் 156 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதிக நவீன பொறியியல் நுட்பங்களுடன் உலகத்தரத்தில் கட்டமைக்கப்படுகிறது. இதில் 465 கிலோ மீட்டர் அதாவது 85 சதவீதம் பாலங்களைக் கொண்டதாகும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications