காக்கி சட்டையை கழற்ற மாட்டேன்! விழுப்புரம் பாடகர் வீரபாண்டி சபதம்! ஏன் இந்த லட்சியம்?
சென்னை: இளையராஜா பாடல்களை அச்சு பிசகாமல் அப்படியே பாடி லட்சக் கணக்கான உள்ளங்களைக் கொள்ளையடித்திருக்கிறார் விழுப்புரம் வீரபாண்டி.
'ஆகாயத் தாமரை அருகில் வந்ததே’ இந்த ஒரே பாட்டின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் சரிகமப விழுப்புரம் வீரபாண்டி. அதன் பின்னர் 'வழி நெடுக காட்டு மல்லி’ பாட்டை அவர் பாட, ஒட்டு மொத்த தமிழகமும் ஒரே நாளில் இந்த விழுப்புரம் பாடகர் பக்கம் சாய்ந்தது.

என்னதான் பாட வாய்ப்பு கிடைத்து அவர் மீடியா முன் வந்து நின்றுவிட்டாலும், இன்னும் அவர் அந்த ஆட்டோ ஓட்டுநர் உடையைக் கழற்றாமல் இருந்து வருகிறார்.
இளையராஜா திரையிசையில் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். அதையும் தாண்டி அவர், தன் இசையால் கண்ணில் படாத பலரைப் பாடகர்களாக மாற்றி இருக்கிறார். அதற்குச் சான்று இந்த வீரபாண்டி.
மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியிலிருந்து பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இவர் மீது இன்று வெளிச்சம் பட்டுள்ளது. யார் இந்த வீரபாண்டி? இவர் கதை என்ன? கஷ்டங்கள் என்ன? அவரே சொல்கிறார்.
“விழுப்புரம்தான் என் சொந்த ஊரு. அங்கேதான் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆட்டோவில் சவாரி போகும் இடங்களில் எல்லாம் சரிகமப நிகழ்ச்சி பற்றி போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்று போட்டிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் போய் தகுதித் தேர்வில் கலந்து கொண்டேன்.

அப்படிக் கலந்து கொள்ளும்போது அடுத்த அடுத்த லெவல் போட்டி வைத்தார்கள். அனைத்திலும் வெற்றி பெற்ற பிறகு மேடைக்கு வந்தேன். பல ஆண்டுகளாக இந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு இந்த மேடை எனக்குக் கிடைத்துள்ளது.
எனக்கு வாய்ப்பு யாரும் கொடுக்க மாட்டார்கள். கோயில் நிகழ்ச்சிகள், கல்யாண நிகழ்ச்சிகளில் பாடவே வாய்ப்பு கிடைக்காது. பலரும் பல காரணம் சொல்லி அனுப்பி விடுவார்கள்.
அப்படியே பல மணிநேரம் காக்க வைப்பார்கள். ஸ்பீக்கர் பாக்ஸ் ஏற்றுவது, இறங்குவது போன்ற வேலைகளைச் செய்யச் சொல்வார்கள். என் அப்பாவும் பாடுவார். அவரைப் பார்த்துத்தான் நானும் பாட ஆரம்பித்தேன். அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கேள்வி ஞானத்தால் அப்படியே கேட்டுப் பாடுவார்.
எங்கள் அப்பா கோயில் நிகழ்ச்சிகளில் பாடுவார். அதுவும் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பாட்டுக்கு வாய்ப்பு பெறுவார். அதற்கே பல எடுபிடி வேலைகளைச் செய்யச் சொல்வார்கள்.
அப்பாவுக்குக் கண்ணில் சின்ன ஆபரேஷன் நடந்தது. அதற்குப் பிறகு அவர் வேலைக்குப் போவதில்லை. அம்மா, ஒரு பள்ளியில் கூட்டும் வேலை பார்க்கிறார். தம்பி பெயிண்ட் அடிக்கும் வேலை பார்க்கிறார். தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டோம்.
வீட்டுக்கு நான் தான் மூத்தவன். ஆகவே சின்ன வயதிலிருந்தே கடந்த 10 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். குடும்ப கஷ்டம். ஆகவே முறையா பாட்டுக் கற்றுக் கொள்ள முடியவில்லை.

எப்படி எப்படியோ கஷ்டப்பட்டேன். கடைசியாக சரிகமப மேடை கிடைத்தது. இதுதான் என் முதல் மேடை. மொத்தம் 5 நடுவர்கள். அதில் 4 பேர் என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஒருவர்தான் தேர்வு செய்ய வேண்டிய நிலை. அவரும் தேர்வு செய்துவிட்டால், மேடை கிடைத்துவிடும். அப்படியான தருணத்தில் மனம் கலங்கி அழுதுவிட்டேன்.
அந்த நேரத்தில் மீண்டும் அந்தப் பல்லவியைப் பாடச் சொல்லி 5 ஆவது நடுவர் என்னைத் தேர்வு செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து பாடி வருகிறேன். மக்கள் மனதிலும் ஒரு இடம் கிடைத்திருக்கிறது.
நான் முறைப்படி பாடகராக மாறினாலும் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்த மாட்டேன். அதுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றியது. ஆகவே, அந்தத் தொழிலையும் ஆட்டோ ஓட்டுநர் உடையையும் விடமாட்டேன்.
என் வீடு இப்போதுவரை கூரை வீடுதான். மழை பெய்தால் வீட்டுக்குள் படுக்க முடியாது. உள்ளே எல்லாம் தண்ணீர் வந்துவிடும். கடன் நிறைய உள்ளது. கல்யாணத்திற்காக வாங்கிய கடன்கள் உள்ளன. அதை எல்லாம் அடைக்க வேண்டும். அதுதான் லட்சியம்” என்கிறார் விழுப்புரம் வீரபாண்டி.












Click it and Unblock the Notifications