அப்போது வெறுப்பாக... இப்போது சிறப்பாக.. அக்.17 முதல் பார்க்கத் தானே போகிறீர்கள் -பெங்களூரு புகழேந்தி
சென்னை: அதிமுக பொன்விழாவை ஏனோ தானோ என ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் கொண்டாட நினைத்ததாகவும், விவாதங்களிலும், பேட்டிகளிலும் தாம் காட்டிய கடும் எதிர்ப்பை தொடர்ந்து தான் இப்போது சிறப்பாக கொண்டாடுவோம் என அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் பெங்களூரு புகழேந்தி சாடியுள்ளார்.
மங்காத புகழுக்கு சொந்தக்காரான எம்.ஜி.ஆரையே இப்போது தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நினைவுக்கு வருகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
அவர்கள் இருவரின் நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றும் அக்.17-ம் தேதி முதல் பார்க்கத் தானே போகிறீர்கள் எனவும் பூடகமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பெங்களூரு புகழேந்தி.

பெங்களூரு புகழேந்தி
எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என குரல் கொடுத்த பெங்களூரு புகழேந்தி, கடந்த மே மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணமாக கூறப்பட்டது என்னவென்றால் கூட்டணிக் கட்சியான பாமகவை பெங்களூரு புகழேந்தி விமர்சித்தார் என்பது தான். தனக்காக குரல் கொடுத்த ஒருவரையே கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தால் காப்பாற்ற முடியவில்லை. அறிவிப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, கொஞ்ச நாள் பொறுமையாக இருங்க என புகழேந்தியிடமே கூறினார் ஓ.பி.எஸ்.

வெறுப்பாக
இதையடுத்து தன்னை அரசியலில் காப்பாற்றிக்கொள்ள தனக்குத் தெரியும் எனக் கூறிவிட்டு அன்று முதல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகிய இருவரையுமே கடுமையாக விமர்சித்து வருகிறார் பெங்களுரு புகழேந்தி. அந்த வகையில் அதிமுக பொன்விழா குறித்து இன்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ள அவர், எம்.ஜி.ஆர். என்ற ஒருவர் இருந்தார், அதிமுகவை தோற்றுவித்தார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு கொடியேற்றுங்க, மிட்டாய் கொடுங்க என்பதோடு பொன்விழாவை முடித்துக்கொள்ள ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நினைவு
தானும், தொண்டர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவாதங்களில் விமர்சித்த பிறகு, இப்போது எம்.ஜி.ஆர். நினைவு அவர்கள் இருவருக்கும் வந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அதிமுக பொன்விழா குறித்து வெறுப்பாக அறிவிப்பு வெளியிட்டவர்கள், இப்போது சிறப்பாக கொண்டாடுவோம் என அறிவிப்பு வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும், அப்படி என்ன தான் இவர்கள் சிறப்பாக விழா எடுக்கப் போகிறார்கள் என்பதை காண ஆவலோடு இருப்பதாக கூறியிருக்கிறார்.

வீடியோ பதிவு
இவர்கள் இருவரின் நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும் எனக் கூறியுள்ள புகழேந்தி அக்டோபர் 17-ம் தேதி முதல் தெரியும் என பூடகமாக பேசியுளார். சசிகலா தனது அரசியல் இன்னிங்ஸ் 2.0வை தொடங்கவிருப்பதாக தகவல் உலா வரும் நிலையில், பெங்களூரு புகழேந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications