"வரி வாங்க தெரியுது.. நிதி கொடுக்க தெரியாதா?” தமிழகம் முழுவதும் முளைத்த பேனர்கள்.. இவங்க வேலையா?
சென்னை: "வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?" என தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் நிலையில், இந்த பேனர்கள் கவனம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது.

பாஜக அரசு, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை அள்ளிக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், "வரி வாங்க தெரியுது.. நிதி கொடுக்க தெரியாதா?" என மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரி பகிர்வு தொடர்பாக திமுக, மத்திய பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால், தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. பாஜகவின் தமிழ்நாடு விரோத செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துவதே திமுகவின் திட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications