12 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு கிடைத்த முதல் பெரிய அடி! ஒன்று கூடி சாதித்த எதிர்க்கட்சிகள்
டெல்லி: மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, நில ஆர்ஜித மசோதா, வேளாண் சட்டங்கள், முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு நீக்கம், வக்பு வாரிய திருத்த சட்டம் என பல சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் 12 ஆண்டுகளில் மோடி அரசுக்கு மசோதா நிறைவேற்றுவதில் ஏற்பட்ட முதல் தோல்வியாக தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதா அமைந்துள்ளதது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. பிரதமர் மோடி பிரதமராக 12 ஆண்டுகளாக உள்ளார். முதல் இரண்டு ஆட்சி காலங்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடத்தியது. ஆனால் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை..

பாஜக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள்
இத்தனை தொகுதிகளில் மட்டும் வென்று ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. நில ஆர்ஜித மசோதாவை முதல் ஆட்சி காலத்தில் நிறைவேற்றியது மோடி அரசு..
இரண்டாவது ஆட்சி காலத்தில் அதாவது 2020 ஆண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி வேளான் சட்டங்களை நிறைவேற்றியது. முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு நீக்கம், வக்பு வாரிய திருத்த சட்டம், உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு எல்லாம் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் பாஜக அரசு அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றியது.
12 ஆண்டுகளில் முதல் தோல்வி
ஆனால், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திருத்த மசோதாவில் மத்திய அரசின் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி காலி செய்துள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசியல் அமைப்பு சட்டத்தின் 131-வது திருத்தம் செய்ய வேண்டும். அரசியல் அமைப்பு திருத்தம் என்பதால், சிறப்பு பெரும்பான்மை அவசியம். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
298 எம்பிக்கள் ஆதரவு அளித்த நிலையில், 230 எம்பிக்கள் எதிராக வாக்களித்தனர். இதனால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு காட்டிய நிலையில், மசோதா தோற்கடிக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசுக்கு மசோதா நிறைவேற்றுவதில் ஏற்பட்ட முதல் தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.
64-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதா
5 மாநில சட்டமன்ற தேர்தல் சமயத்தில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு கொண்டு வந்த 'தீவிரவாத தடுப்பு சட்டம்' (Prevention of Terror Law) தோல்வி அடைந்தது. ராஜ்யசபாவில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டி மசோதாவை அரசு நிறைவேற்றியது.
ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுக்கும் 64-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவும் தோற்கடிக்கபட்டு இருக்கிறது. எனினும், பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 73 வது திருத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.















Click it and Unblock the Notifications