அதிமுக - பாஜக கூட்டணி வெல்லுமா? நயினாரை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்.. கொளுத்தி போடும் சு.சாமி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துள்ளதை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். இந்த கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெல்லுமா? என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் முதல்வர் வேட்பாளராக நயினார் நாகேந்திரனை முன்நிறுத்தினால் பெரிய பலன் கிடைக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த 2021ல் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து இருந்தன. அதன்பிறகு இந்த கூட்டணி முறிந்தது. இப்போது 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இருகட்சிகளும் கைகோர்த்துள்ளன.
பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. இதனால் இந்த கூட்டணிக்கு இடையூறாக அண்ணாமலை இருக்க கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்து தான் அண்ணாமலைக்கு ‛கல்தா' கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி என்பது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை அருகே வைத்து கொண்டு இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். 2026 சட்டசபை தேர்தலை அதிமுக தலைமையில் பாஜக எதிர்கொள்ளும் என்று கூறினார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை விரும்பிய இருகட்சிகளின் தலைவர்கள் ஹேப்பியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மீண்டும் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்து உள்ளது பற்றி பாஜகவின் மூத்த தலைவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில் பாஜக - அதிமுக கூட்டணி நிச்சயம் வெல்லும். நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் 3ல் 2 பங்கு தொகுதிகளை கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛நயினார் நாகேந்திரன் தலைமையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தும் பட்சத்தில் 3ல் 2 பங்கு இடங்களில் வெல்ல முடியும்'' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் என்று அமித்ஷா கூறியுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி, நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பேசுவது இது முதல் முறையல்ல.
ஏனென்றால் சுப்பிரமணியன் சுவாமியை எடுத்து கொண்டால் நயினார் நாகேந்திரன் மீது தனி அன்பு என்பது உள்ளது. தமிழகத்தில் மற்ற பாஜக தலைவர்களை சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து வரும் சூழலில் அவர் நயினார் நாகேந்திரன் மீது மட்டும் பாசம் காட்டி வருகிறார். இதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலை எடுத்து கொள்வோம்.
அந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், தென்சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், விருதுநகரில் நடிகை ராதிகா, திருநெல்வேல்வேலயில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் தேர்தலில் தோற்றனர்.
ஆனாலும் தேர்தலுக்கு முன்பாக சுப்பிரமணியன் சுவாமி ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அதில் ‛‛தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் (நயினார் நாகேந்திரன்) வெற்றி பெற்றால் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். அதேவேளையில் நான் பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரீட்சயமானவர்கள் இல்லை. இதனால் அவர்களை பற்றி கருத்து சொல்லாமல் இருப்பதே சிறந்தது'' என கூறியிருந்தார். இப்படி நயினார் நாகேந்திரன் மீது தனி அன்பு கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி தான் தற்போது அவரை பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக்கினால் 3ல் 2 பங்கு தொகுதிகளில் வெல்லலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications