ரவுடித்தனத்தால் பாஜகவை அடக்கிவிடலாம் என நினைப்பா? அர்ஜூன் சம்பத்துக்கு ஆதரவாக வரிந்துகட்டி வந்த பாஜக
சென்னை : அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தச் செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அம்பேத்கர் சிலைகளை, அம்பேத்கர் மணிமண்டபத்தை விசிகவினர் சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் என விமர்சித்துள்ளார் நாராயணன்.
அம்பேத்கருக்கு காவி உடை, குங்குமம் அணிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அம்பேத்கரை இந்துத்வராக சித்தரிக்கும் வகையில் பாஜக மற்றும் இந்துத்வ அமைப்புகள் செயல்படுவதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் விசிக உள்ளிட்டவர்களுக்கும் இடையே தகராறு மோதல்கள் ஏற்பட்டன.
அம்பேத்கர் சிலைக்கு விபூதி பூச மாட்டேன்! நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த அர்ஜுன் சம்பத்!

அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு
சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக, அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன் என அர்ஜூன் சம்பத் கோர்ட்டில் உத்தரவாத கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

விசிக - பாஜக மோதல்
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டையில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அவர்கள் வருவதை அறிந்து விசிகவினர் ஒன்று திரண்டு பாஜகவினர் மாலை அணிவிக்கக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கரை சாதிக்குள் அடைத்து
இச்சம்பவங்கள் தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பன்முகம் கொண்ட ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு சாதிக்குள் அடைத்து அவரை சிறுமைப்படுத்தி கொண்டிருக்கிறார் தொல்.திருமாவளவன்.

காவல்துறைக்கு சிக்கல் ஏற்படும்
தொடர்ந்து கடந்த இரு வருடங்களாக, அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தச் செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்தில் காவல்துறைக்கே சிக்கலை வரவழைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தாக்க முற்பட்டது கண்டிக்கத்தக்கது
அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை தங்களின் சொந்த இடம் போல் கருதிகொண்டு அங்கே யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று முடிவு செய்வது தாங்கள்தான் என்ற தோரணையில் விசிகவினரை அனுமதிப்பது முறையல்ல. டிச.6ல் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்ல அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே விசிகவைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியினர் அவரை தாக்க முற்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு பயம்
நீதிமன்ற வளாகத்திலேயே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை எனும் நிலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்பதையே எடுத்துகாட்டுகிறது. அதேபோல் தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினர் மீது விசிகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதும், அதை கண்டும் காணாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் திமுக அரசின் போக்கையே உணர்த்துகிறது.

அடங்க மறுப்போம்
அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும்" என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். அம்பேத்கர் நினைவு நாளில் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து விசிகவை கடுமையாக அட்டாக் செய்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.