ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு.. காக்கி பேண்ட், யூனிஃபார்முடன் ரெடியான பாஜக தலைகள்! “ஷாக்”அறிவிப்பால் ஏமாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் 44 இடங்களில் நவம்பர் 6 ஆம் தேதியான நாளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பாஜக தலைவர் ஆர்.எஸ்.எஸ். சீருடை படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ரெடி என கூறிய நிலையில் ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்தது.
ஆனால் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து, ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அரசு அனுமதி மறுப்பு
இதையடுத்து தமிழ்நாட்டின் 51 இடங்களில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக அந்த ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்தது.

44 இடங்களில் அனுமதி
தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ள 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் நவம்பர் 6 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளித்தது.

ஒத்திவைப்பு
இந்த நிலையில் அணிவகுப்பு ஊர்வலத்தை ஒத்திவைப்பதாக ஆர்.எஸ்.எஸ். தென் மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்.

ஏன் ஊர்வலம்
தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும், இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம்.

சட்டம் ஒழுங்கு
அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6, 2022 நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம்.

உள் அரங்கில் ஊர்வலம்
நேற்று (04.11.2022) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மேல்முறையீடு
நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6 ஆம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

வினோஜ் பி செல்வம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டில் அணிவகுப்பு ஊர்வலத்தை ஒத்திவைப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த உத்தரவு வெளியான உடனே பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி பேண்ட், காக்கி பெல்ட், வெள்ளை சட்டையுடன் நவம்பர் 6க்கு தயாராவோம் என்று பதிவிட்டு இருந்தார்.

வேலூர் இப்ராஹிம்
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிமும் வினோஜ் பி செல்வம் பகிர்ந்த அதே படத்தை வெளியிட்டு, "நவம்பர் 6 க்கு நான் தயார். பாரத் மாதா கி ஜெய்." என்று குறிப்பிட்டு இருந்தார். இதுபோல் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தொண்டர்கள் என பலரும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications