கப்சிப்.. அண்ணாமலைக்கு ‘கேட்’ போட்ட பாஜக தலைமை? ‘இன்வால்வ் ஆகாதீங்க’ ஓபிஎஸ் டீமே சொல்லுதே.. ரைட்டு!
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசியதால், டெல்லி தலைவர்கள் அவரை கடிந்துகொண்டதாக பாஜக வட்டாரத்தில் பேச்சுகள் உலவி வருகின்றன. ஓபிஎஸ் அணியினரும், பாஜக தலைமையின் செயலைச் சுட்டிக்காட்டி அண்ணாமலைக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்துள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து செயல்படுமாறு பாஜக தலைமை அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் பட்டும் படாமல் பேசி வந்தாலும், ஈபிஎஸ்ஸுக்காக அண்ணாமலை சில முயற்சிகளை எடுத்ததாகக் கூறப்பட்டது.
அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, டெல்லி தலைமைக்கு நெருக்கமான சிலர் மூலம் டெல்லிக்கு தகவல் சென்றுள்ளது.

பாஜக தலைமையின் விருப்பம்
அதிமுக விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் எடுக்க இருக்கும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்லாமல் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் பாஜக மேலிடத்தை நம்பிக் காத்திருக்கின்றனர். ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் பாஜக தலைமையின் விருப்பமாக இருப்பதாகப் பேசப்படுகிறது.

தமிழக பாஜக
ஆனால் பாஜக மேலிடத்தின் விருப்பத்தை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதால் ஒருங்கிணைந்த அதிமுக உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை விட்டுப் பிடிக்கலாம் எனக் கருதி வருகிறது. தமிழக பாஜகவை பொறுத்தவரை, ஈபிஎஸ், ஓபிஎஸ் மோதல் விவகாரத்தில் எங்கள் கட்சி தலையீடு இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், பாஜகவில் சிலர் ஓபிஎஸ் அணிக்கும், சிலர் ஈபிஎஸ் அணிக்கும் சாதகமாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

வரிந்துகட்டி வந்த அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக டெல்லியில் சில மூவ்களையும் அண்ணாமலை செய்ததாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்கும் வகையிலும் சில கருத்துகளைப் பேசி இருக்கிறார் அண்ணாமலை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி டிவியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என அருணா ஜெகதீசன் கமிஷன் சுட்டிக்காட்டிய நிலையில், ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வரிந்து கட்டி வந்தார் அண்ணாமலை.

அண்ணாமலை உதவி
எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கும், அங்கு முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும், தனது மேலிட தொடர்புகள் மூலமாக அண்ணாமலை உதவியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்தில் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தபோது, முக்கிய தலைவர்களுடன் அதிமுக விவகாரம் பற்றியும் விவாதித்துள்ளனர். அப்போது அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனை நோட் செய்து, அண்ணாமலைக்கு வார்னிங் கொடுத்துள்ளதாம் டெல்லி தலைமை.

அண்ணாமலைக்கு டெல்லி ஆர்டர்
பாஜக சார்பில் பலமுறை பேசியும் பணிந்து போகாமல் எடப்பாடி பழனிசாமி அடம்பிடித்து வருகிறார். நீங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக நம்முடைய கட்சியினரே கூறுகின்றனர். இப்படி இருந்தால், நம்முடைய எதிர்கால கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே வரவிருக்கும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க முடியும். எனவே அதிமுக விவகாரத்தில் இனி நீங்கள் எந்த ஒரு அணியையும் ஆதரித்து கருத்து கூறக் கூடாது என அண்ணாமலைக்கு டெல்லி தலைமை ஆர்டர் போட்டுள்ளதாம்.

நாங்க பார்த்துக்கிறோம்
கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டாம், சரியான நேரத்தில் டெல்லியில் இருந்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உங்களுக்கு உத்தரவு வரும் என்று திட்டவட்டமாக டெல்லி தலைமை அண்ணாமலைக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், அதன் பிறகு, ஈபிஎஸ் பற்றி பெரிதாக அண்ணாமலை இன்வால்வ் ஆகுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அண்ணாமலையை சீண்டும் ஓபிஎஸ் தரப்பு
இந்நிலையில்தான் சமீபத்தில் குஜராத் சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பாஜக தலைவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அண்ணாமலையின் ஆப்போசிட் குரூப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஓபிஎஸ் அணியினர், எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைமை புறக்கணித்து விட்டதை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி சீண்டியும் வருகின்றனர்.

குஜராத்தில் என்ன நடந்தது
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "குஜராத்தில் என்ன நடந்தது என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை நடுநிலையோடு சொல்ல வேண்டும். அங்கு ஓபிஎஸ் எங்கே என்று பிரதமர் தேடினார். ஏசி சண்முகம் போன்றவர்கள் அதை அறிவார்கள். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் இது தெரியும். பின்னர் ஓபிஎஸ்ஸை அழைத்து பதவி ஏற்பு விழாவில் மேடையில் அமர வைத்து அழகு பார்த்தார் பிரதமர் மோடி.

அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை மரியாதையோடு நடத்துகிறது. அன்போடு நடத்துகிறது. இதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். துரோகிகளோடு கூட்டணி இல்லை, ஊழல்வாதிகளோடு கூட்டணி இல்லை என்பது தான் பாஜகவின் முடிவு. அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் புகழேந்தி. அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் காரணமாகவே, ஓபிஎஸ் அணியினர் பாஜக தலைமையின் முடிவைச் சுட்டிக்காட்டி அண்ணாமலையைச் சீண்டியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications