தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் பாஜக! “உள்நோக்கம்?” மோசடி, ஊழல் பெருகுமாம்!
சென்னை : தமிழக அரசு கொண்டு வரவுள்ள 'மக்கள் ஐடி' லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த 'மக்கள் ஐடி' முயற்சி பயன்படும் என்றும், தமிழக அரசு இந்த தேவையற்ற முயற்சியை கைவிட வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்ற அடையாளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
அதன்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து ஒருங்கிணைந்த தரவு தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வசித்து வருபவர்களுக்கு 10 அல்லது 12 இலக்க மக்கள் ஐடி கொண்டு வரப்பட்டு இதன் மூலம் சமூக நலத்திட்டங்கள் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஐடி
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஆதார் எண் போல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் 'மக்கள் ஐடி' என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்டதாக இருக்கும். அனைத்து சேவைகளையும் இந்த மக்கள் ஐடி மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டெண்டர்
இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது. இந்த தரவுத் தளம் தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தியாவிற்கான ஆதார் போல, தமிழகத்தில் இந்த 'மக்கள் ஐடி' இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆரம்பத்திலேயே மக்கள் ஐடிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாஜக எதிர்ப்பு
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் 'மக்கள் ஐடி' என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காக பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாக கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன்.

முறைகேடுகள்
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால், 2014ஆம் ஆண்டு வரை மாநில அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேரவேண்டிய உதவித்தொகை, சம்பளம் அல்லது மானியத்தை பணமாக செலுத்தி கொண்டிருந்தன. இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் மூலம் போலி பயனாளிகளை அதிக அளவில் சேர்த்து முறைகேடுகளை செய்து, பயனாளிகளை மிரட்டி, ஏமாற்றி அவர்களுக்குரிய தொகையினை செலுத்தாமல் ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்று வந்தன.

கொள்ளை
உதாரணத்திற்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 150 ரூபாய் தின சம்பளத்தில், ரூபாய் ஐம்பது மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைந்தது. ஆனால், ரூபாய் 150 கொடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மீதி பணமானது இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதே நிலை தான் மற்ற அனைத்து திட்டங்களிலும் நீடித்து வந்தது.

தற்போதுதான் முழுமையாக சென்றடைகிறது
தற்போதைய பாஜக ஆட்சியில் தான் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) இணைப்பு மூலம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய மானியம் மற்றும் உதவிகள் நேரிடையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முழுமையாக செலுத்தப்பட்டு அரசின் மானியம் மற்றும் உதவி தொகை முழுவதும் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்), முதியோர் உதவி தொகை, விவசாயிகள் கௌரவ நிதி, எரிவாயு உருளை மானியம், உர மானியம், கல்வி மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான மானியம் மற்றும் உதவி தொகை தற்போது நேரடியாக உரிய பயனாளிகளின் ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

ஊழல், மோசடி
குறிப்பாக போலிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு, இடைத்தரகர்கள் அகற்றப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் மூலம் மட்டுமே இது வரை கடந்த எட்டு ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.5 லட்சம் கோடி என்பது மகத்தான சாதனை. இதன் மூலம் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பெருமளவில் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுவதில் முறைகேடுகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேவையில்லாதவர்களுக்கு நிதியுதவி, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் போலி பயனாளிகளை சேர்த்தது, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் என பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை ஆதார் அட்டை மூலம் கண்டுபிடித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, சில திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட தொகையும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் ஊழல், மோசடி செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

உள்நோக்கம்
லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ள இந்த நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை (JAM) பயனாளிகளுக்கு பேருதவி திட்டமாகவும், ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் அமைந்துள்ள நிலையில், மாநில அரசு, ஏற்கனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

உடனே கைவிடுங்க
ஆகவே, உண்மையை உணர்ந்து மக்கள் நலத்திட்டங்களில் ஊழலை தடுக்க வேண்டிய தமிழக அரசு, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பலவேறு சட்டரீதியான பிரச்சனைகளும் இந்த விவகாரத்தில் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளை செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச, ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications