ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி.. ஆதரவாக குதித்த அண்ணாமலை! திரளாக கிளம்பிய பாஜகவினர்
சென்னை: கடலூரைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு விசிக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அந்த ராணுவ வீரரின் குடும்பத்தைச் சந்தித்தது பாஜகவினர் ஆதரவு கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் டெல்லியில் இப்போது பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியா இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், விசிக நிர்வாகிகள் சிலர் அவரை தொடர்பு கொண்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த ஆடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நீ டெல்லியா? ஆனா உன் குடும்பம் கடலூர்லதானே இருக்கு! ராணுவ வீரருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்

வீடியோ
ராணுவ வீரர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவில், "திருமாவளவன் தனி தமிழ்நாடு கேட்கிறாராம். முதலில் அவரால் தனியாக ஒரு வார்டில் நின்று வெல்ல முடியுமா? இதற்காகவா நாங்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளோம். நாட்டை காக்கவே நாங்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளோம். இப்படிப் பிரிக்க இல்லை. உங்கள் சுயநலத்திற்காகத் தனி நாடு கேட்பீர்களா! இந்தளவுக்கு உங்களைப் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு. கருத்துச் சுதந்திரம் எனச் சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா என்ன.. தனி தமிழ்நாடு என வீதியில் இறங்கிச் சொல்லிப் பாருங்கள் உங்களை வந்தே மாதரம் சொல்ல வைப்போம்" என்று அந்த வீடியோவில் ராணுவ வீரர் கூறி இருந்தார்..

விசிக நிர்வாகி
இது இணையத்தில் பலராலும் பகிரப்பட்ட நிலையில், விசிகவை சேர்ந்த சிலர் அவரை மிரட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விசிகவின் லத்தூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர் ராணுவ வீரரைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த ராணுவ வீரருக்கு போன் செய்த மணிமாறன், திருமாவளவனை எப்படித் தரக்குறைவாகப் பேசலாம் என்றும் அவரிடம் மரியாதையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார். இருப்பினும், அந்த வீரர், பீரங்கியை பார்த்தே அஞ்சாத நான் இதற்குப் பயப்படுவேனா எனக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடையும் விசிக நிர்வாகி, அந்த ராணுவ வீரரை தாகத முறையில் திட்டியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.

அண்ணாமலை
மேலும், அந்த ஆடியோவில், "ஒழுங்கா மன்னிப்பு கேளு.. நீ டெல்லியில் இருந்தாலும், உங்க குடும்பம் இங்க தானா இருக்காங்க.. அவங்க உயிரோடு இருக்கணும்னா ஒழுங்கா மன்னிப்பு கேளு" என மிரட்டுகிறார். இந்த ஆடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில், சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு பாஜக முழு பாதுகாப்பைத் தரும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறி இருந்தார். மேலும், விசிக நிர்வாகியின் அந்த பேச்சை அண்ணாமலை கடுமையாகக் கண்டித்தார்.

திரண்ட பாஜகவினர்
இந்தச் சூழலில் இராணுவ வீரரின் குடும்பத்தினரை மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்து அந்த குடும்பத்திற்கு ஆதரவாக பாஜகவினர் திரளாகச் சென்று ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டரில், "இன்று விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து CRPF வீரரின் இல்லத்திற்குச் சென்று தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு என்றும் அரணாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கின்றார்கள். நம்முடைய தலைவர்களை, தொண்டர்களை மனதார பாராட்டுகின்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.