ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல கிரேஸ் பவுண்டேஷனில் பதுக்கிய ஆயுதங்கள்.. பக்கா ஸ்கெட்ச்.. குற்றப்பத்திரிகை-3
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் போலீசார் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் எப்படி அரசியல் தலைவராக உருவெடுத்தார்? ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னணி என்ன? ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் எப்படி இந்த படுகொலையை அரங்கேற்றினர்? என்கிற அதிர்ச்சி விவரங்களை இந்த 5,000 பக்க குற்றப்பத்திரிகை விவரிக்கிறது.
(2-ம் பாகத்தின் இறுதி) கஞ்சாலை அஞ்சலையும் மலர்க்கொடியும்: இப்போது ஆம்ஸ்ட்ராங் சதித் திட்டத்தில் புளியந்தோப்பு கஞ்சா அஞ்சலையும், தோட்டம் மலர்க்கொடியும் இணைகின்றனர். தமது கள்ளக்காதலான் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட பிறகு 'கஞ்சா' விற்பனை தொழிலில் ஆம்ஸ்ட்ராங் தரப்பால் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தார் கஞ்சா அஞ்சலை. இதனால் 'கொலை வெறியில்' இருந்தார் அஞ்சலை. சம்போ செந்திலின் கூட்டாளியின் தோழிதான் வழக்கறிஞர் தோட்டம் மலர்க்கொடி. அஞ்சலையும் மலர்க்கொடியும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பணப் பரிமாற்றங்களில் உடந்தையாக செயல்பட்டிருக்கின்றனர்.

இனி ஆம்ஸ்ட்ராங் படுகொலை எப்படி நடந்தது?
வெடிகுண்டுகள் கடத்தல்: கோடம்பாகத்தில் சம்போ செந்திலின் கூட்டாளி புதூர் அப்பு பதுக்கி வைத்த நாட்டு வெடிகுண்டுகள், துப்புரவு தொழிலாளி ஒருவர் மூலம் இரு சக்கர வாகனத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நாட்டு வெடிகுண்டுகளைப் பெற்றுக் கொண்ட தமாகா ஹரிஹரன், மொட்டை கிருஷ்ணன் இருவரும் அருளுக்கு மெசேஜ் அனுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் அருள் கைகளுக்கு கைமாறின. கொடுங்கையூரில் மூடப்பட்ட நிலையில் உள்ள போதை மறுவாழ்வு மையமான கிரேஸ் பவுண்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டன அந்த வெடிகுண்டுகள்.
மறைக்கப்பட்ட ஆயுதங்கள்: ஆற்காடு சுரேஷுன் திருநின்றவூர் சூதாட்ட மையத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள் ஆகியவையும் அருள் கைகளுக்கு மாறின. இந்த ஆயுதங்கள் திருநின்றவூர் பவானி அம்மன் கோவில் பின்புறம் முதலில் மறைத்து வைக்கப்பட்டன. பின்னர் அந்த ஆயுங்களும் கொடுங்கையூர் கிரேஸ் பவுண்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

உணவு டெலிவரி ஊழியர்கள் வேடம்: ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தலைமையில் அருள் உட்பட 6 பேர் கொண்ட கேங், ஆம்ஸ்ட்ராங் நடமாட்டத்தை முழுவீச்சாக கண்காணித்தது. இந்த கேங்கின் பிடியில் ஆம்ஸ்ட்ராங் கட்டி வரும் வீட்டுக்கு அருகே வசித்த பிரதீப் சிக்குகிறார். இவர்தான் ஆம்ஸ்ட்ராங்கை நெருக்கமாக கண்காணித்து உளவுத் தகவல் அனுப்பியவர். இந்த 6 பேர் குழுவில் சிலர் ஜூமாட்டோ, ஸ்விக்கி ஊழியர்களைப் போல உடை அணிந்து கண்காணித்தனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் வீடு கட்டும் இடம் அமைந்துள்ள தெருவுக்குள் எப்படி நுழைந்து சம்பவத்தை நிகழ்த்திவிட்டு எப்படி வெளியேறி தப்புவது என்பதையும் அச்சு பிசகாதவாறு 'ஸ்கெட்ச்' போட்டு வைத்திருந்தது பொன்னை பாலு கேங்.கடந்த ஜூலை 5-ந் தேதியும் வீடு கட்டுமானப் பணியை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் காலையில் வந்து சென்ற பின்னர் மாலையில் மீண்டும் வருகிறார் என்கிற தகவலை பொன்னை பாலுவுக்கு போன் செய்து தெரிவித்தார் பிரதீப்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இந்த தகவலின் அடிப்படையில்தான் ஆம்ஸ்ட்ராங் கதையை முடித்துவிட்டு தப்பி ஓடியது பொன்னை பாலு குழு. அப்போது ஆம்ஸ்ட்ராங் உயிருடன் தப்பி விடக் கூடாது என்பதற்காக வீச தயார் நிலையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் கீழே தவறி விழுந்தன. அவை வெடிக்காத நிலையில் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் கொசஸ்தலை ஆற்றில் தூக்கி வீசப்பட்டன. இப்படித்தான் விவரிக்கிறது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகை. (நிறைவு)
பகுதி 1 - ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்- அதிர வைக்கும் 5,000 பக்க போலீஸ் குற்றப்பத்திரிகை-1
பகுதி 2 - ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்- அதிர வைக்கும் 5,000 பக்க போலீஸ் குற்றப்பத்திரிகை-2












Click it and Unblock the Notifications