ஆம்ஸ்ட்ராங் கொலை: ரவுடி நாகேந்திரனின் 'கொலை ராஜ்ஜியம்'- சிறையில் இருந்து ஸ்கெட்ச் தரும் கேடி!
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது பின்னணியும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையை கதிகலக்கி சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட இருக்கிறார். ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தமான் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் சென்னையில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை ஐகைதுகள்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கஞ்சா அஞ்சலை, 'தோட்டம்' மலர்க்கொடி என பாஜக, அதிமுக, காங்கிரஸ், தமாகா கட்சிகளைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில் அஸ்வத்தாமன் கைதுதான் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்த கட்டத்தை நகர்த்தி இருக்கிறது.
சிக்கிய அஸ்வத்தாமன்: அஸ்வத்தாமன்.. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடந்த 7-ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர் வேறுயாருமல்ல.. சென்னையை கதிகலக்கி வந்த ரவுடி நாகேந்திரனின் மகன்தான். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனுக்கான தொடர்பு குறித்தும் போலீசார் விசாரிக்க உள்ளனர். ஏனெனில் சிறையில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு 'ஆட்களை' 'வெட்டி சாய்ப்பதில்' கில்லாடிதான் ரவுடி நாகேந்திரன். சென்னையை ஒரு காலத்தில் கதிகலக்க செய்த ரவுடிதான் இந்த நாகேந்திரன்.
சேரா, வெள்ளை ரவிக்குப் பின் நாகேந்திரன்: சென்னையில் சேரா, வெள்ளை ரவி என பெரிய 'தலைகள்' ஆட்டம் போட்டு அடங்கிப் போன காலத்தில் 'தலையெடுத்த' ரவுடிதான் நாகேந்திரன். வடசென்னை கொருக்குப்பேட்டை கூட்ஷெட் ஏலத்தை முன்வைத்துதான் ரவுடிகளிடையேயான மோதல் வெடிக்கும். இந்த கூட்ஷெட் ஏலத்தை கையில் வைத்திருந்தது நாகேந்திரன். ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து, கடத்தல் பேரங்கள், சினிமா பிரபலங்களுக்கு அடியாள் என "பன்முகம்" காட்டிய நாகேந்திரன், 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார்.
நாகேந்திரனின் கொலை ராஜ்ஜியம்: அதிமுகவின் ஸ்டான்லி சண்முகம் கொலை தொடங்கி ரவுடி நாகேந்திரன் தலைதூக்கினார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பலபேர் முன்னிலையிலேயே தமக்கு போட்டியாக உருவெடுத்த பொக்கை ரவியை சரமாரியாக போட்டுத் தள்ளியதும் ரவுடி நாகேந்திரன்தான். தனது கூட்டாளி காமேஷை பொக்கை ரவி கோஷ்டி போட்டு சாய்த்த போது சூடம் ஏற்றி 'கொலை சபதம்' எடுத்தது ரவுடி நாகேந்திரன் கேங். அப்படியே பொக்கை ரவி கோஷ்டியின் பாலாஜியையும் வெட்டிச் சாய்த்தது. ரவுடி நாகேந்திரன் காலத்தில் கோஷ்டி பூசல்களில் பாட்டில் மணி, ஜெஜெ நகர் ரஞ்சித், பிரபாகரன், டைசன், பாளையம் என பலரும் 'அரிவாள்' ரத்தத்தால் பதம் பார்க்கப்பட்டு பரலோகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்பாவுக்கு தப்பாத அஸ்வத்தாமன்: தற்போது கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் ரவுடி நாகேந்திரன். அப்பாவுக்கு தப்பாமல் மகன் அஸ்வத்தாமன் தலையெடுக்க, ஆம்ஸ்ட்ராங்குடன் மோதல் இருந்திருக்கிறது. இதனால் சம்பவம் செந்திலுடன் ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிராக அஸ்வத்தாமன் கை கோர்த்திருக்கிறாராம். இதனடிப்படையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தமான் கைது செய்யப்பட்டார்.
மகனுக்காக ஸ்கெட்ச் போட்டு தந்த நாகேந்திரன்?: தற்போது அஸ்வத்தமானை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில்தான் நாகேந்திரனையும் சில நாட்களுக்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்தது போலீஸ். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 23-வது நபர் நாகேந்திரன். தற்போது வேறு ஒருவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் அஸ்வத்தமானின் அப்பா ரவுடி நாகேந்திரனையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவலில் எடுக்க இருக்கிறது போலீஸ். மகன் அஸ்வத்தமானின் பகையாளி ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்க சிறையில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ரவுடி நாகேந்திரன் என நம்புகிறது போலீஸ். இது தொடர்பாகவே நாகேந்திரனை கஸ்டடியில் வைத்து விசாரிக்க இருக்கிறதாம் போலீஸ்.












Click it and Unblock the Notifications