என்னோட நண்பர்.. 'ஆம்ஸ்ட்ராங்' உடனான நினைவுகளை பகிர்ந்து அன்புமணி ராமதாஸ் உருக்கம்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் என்னுடைய நண்பர். 6 மாதத்துக்கு முன்பு கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம் என பாமக அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசினார். மேலும் தமிழக அரசை விமர்சித்தும் அவர் பேசினார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் எனது நண்பர் என்றும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து உருக்கமாக பேசினார்.
அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: - இந்தியாவில் பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கியவர் கன்சிராம். இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.
இவரும் நம்ம மருத்துவர் ராமதாசும் நண்பர்கள். அவர் இப்போது இல்லை. முன்பு அவர் இருக்கும் போது மருத்துவர் ராமதாசை சந்தித்து பேசுவார். அப்போது அவர் சொல்வார், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். நீங்க பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சேர்ந்து இந்த மக்கள் முன்னேற்றத்துக்கு எதாவது செய்யனும் என்று சொல்வார்.
ஆம்ஸ்ட்ராங் என்னுடைய நண்பர். 6 மாதத்துக்கு முன்பு கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது அவர் என்னிடம் சொன்னார். இந்த மக்கள் என்னைக்கு தான் புரிஞ்சுக்க போறாங்களோ என்று. இரு சமுதாய மக்கள் சேர வேண்டும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் சொன்னார். ஆனால் இந்த சமுதாயம் வளரக்கூடாது. குடிக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. உங்களை திமுக வாக்கு வங்கியாக மட்டும் தான் பார்க்கிறது.
உங்களுக்கு படிப்பு தான் வேண்டும். அது தான் முக்கியம். ஆனால் இந்த சமுதாய மக்களை படிக்க விடாமல் குடிக்க தான் தள்ளப்படுகிறார்கள். சாராயம் குடிப்பதில் மட்டும் தமிழ்நாடு முதலில் இருக்கிறது. வேலைவாய்ப்பில் கடைசியில் இருக்கிறது. மனித வளர்ச்சி குறியீடுகளில் கடைசியில் இருக்கிறது. குடிசை ஒழிப்பில் கடைசியில் இருக்கிறது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் உருக்கத்துடன் பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் கூறுகையில், "ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 3 பேரை பிடித்துள்ளோம். உணவு டெலிவரி ஊழியர் உடை, ரத்தம் படிந்த அரிவாள்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துதான் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். கைது செய்யப்பட்ட 8 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை பிடித்துள்ளோம். உடனடியாக கைது செய்யவில்லை. அனைத்து சூழல்களையும் ஆய்வு செய்த பிறகுதான் கைது செய்து இருக்கிறோம்.
கவுன்டர் எவிடன்ஸ் இருந்தால் அதிகாரிகளிடம் தாராளமாக வந்து கொடுக்கலாம்.. ஏதாவது ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. தற்போது பிடிபட்ட 3 பேரை கூட கைது செய்யவில்லை. விசாரணை செய்த பிறகு முகாந்திரம் இருந்தால்தான் கைது செய்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications