சக்கர வியூகம்.. முக ஸ்டாலினுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீர் அழைப்பு.. பரபர பின்னணி!
சென்னை: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீரென்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அக்கட்சியின் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) உள்ளார். இவருக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சந்திரசேகரராவ் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் புறக்கணித்து வருகிறது.
மேலும் தெலங்கானா சென்ற பிரதமர் மோடியையும், சந்திரசேகர ராவ் வரவேற்காமல் வெளியூர் செல்வதை வாடிக்கையைாக வைத்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, ஆந்திராவை மாற்றாந்தாய் மனப்பான்மையாக பார்த்து நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார் என தொடர்ந்து சந்திரசேகரராவ் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

3 அணி உருவாக்கும் கேசிஆர்
மேலும், 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அரசியலில் கால்பதிக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். இதற்காக அவர் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) எனும் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் இல்லாத 3 வது அணியை உருவாக்க சந்திரசேகரராவ் காய்நகர்த்தி வருகிறார்.

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த கேசிஆர்
இந்நிலையில் தற்போது சந்திரசேகர ராவ், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். தெலங்கானாவில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிப்ரவரி 17 ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு, சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அன்றைய தினம் செகந்திராபாத்தில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திலும் பங்கேற்கும்படி சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் செல்ல வாய்ப்பு?
இந்நிலையில் தான் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 17 ல் தெலங்கானா செல்லலாம் எனவும், தலைமை செயலக திறப்பு விழா மட்டுமின்றி பொதுக்கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தென்மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கவனம் பெற உள்ளது. மேலும் சந்திரசேகரர ராவ் நகர்வுகள் காங்கிரஸ், பாஜகவுக்கு பெரிய தலைவலியாக மாறலாம்.

ஏன் முக்கியம்?
சந்திரசேகர ராவ் ஏறக்குறைய தென்மாநிலங்கள் உள்பட பிற மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா கம்மத்தில் சந்திரசேகரராவ் தனது கட்சியின் பெயர் மாற்றத்துக்கு பிறகு முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில் சந்திரசேகரராவ் 3 மாநில முதல்வர்களையும் ஒரே மேடையில் அமரசெய்து பேச வைத்தார். விரைவில் அவர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தான் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பேசும் பொருளாகும் கேசிஆர்
மேலும் சந்திரசேகர ராவின் ஒவ்வொரு நகர்வுகளும் பேசும் பொருளாகி வருகின்றன. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமரான கர்நாடகாவின் தேவேகவுடா, அவரது மகனும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட பல தலைவர்களை சந்திரசேகரராவ் சந்தித்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவனும், சந்திரசேகர ராவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதேபோல் பல விவசாய அமைப்பினர் சந்திர சேகரராவுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஒவ்வொரு நகர்வும் உற்றுநோக்கப்படும் நிலையில் பிப்ரவரி 17 ல் நடக்கும் நிகழ்வை காங்கிரஸ், பாஜக மேலிடங்கள் நன்கு கவனிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications