சென்னையில் லேசாக அதிகரிக்கும் தொற்று.. மக்களே உஷார்.. எல்லாம் நம் கையில்தான்! கண் கெட்ட பிறகு...
சென்னை: சென்னை உள்ளிட்ட நகரங்களில் லேசாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரிசோதனைகளை அரசு அதிகரித்தாலும் பொதுமக்கள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தொய்வின்றி செய்தால் 3-ஆவது அலை தமிழகத்தில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கலாம்.
கொரோனா... கொரோனா.. கொரோனா... கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்த ஒலிதான் கேட்கிறது (கைலாசாவுக்கு இதிலிருந்து விலக்கு!). அந்தளவுக்கு சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளையே ஆட்டம் காண வைக்கிறது.
எத்தனை சிக்கல்கள், எத்தனை உயிரிழப்புகள், எத்தனை எத்தனை பாதிப்புகள்.. இப்படியாக பொருளாதாரம் தொடங்கி பொதுமக்கள் வரை அனைத்து அம்சங்களும் பாதிக்கப்பட்டன. முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அடுத்தடுத்த வெர்ஷன்களில் இந்த கொரோனா வைரஸ் உருமாற்றிக் கொண்டே வருகிறது.

கொரோனா முதல் அலை
இந்த கொரோனா முதல் அலையில் முக்கியமாக பெரியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அடுத்த இரண்டாம் அலையில் நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவின் 3ஆவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த அலையானது குழந்தைகளை பாதிக்கக் கூடும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

3ஆவது அலையை தடுக்க
இந்த நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டாவது அலை கட்டுக்குள் வைக்கப்பட்டதால் குறைந்திருந்த கேஸ்கள் தமிழகத்தின் கோவை, சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசாக அதிகரித்து வருகிறது. இந்த 3ஆவது அலையை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

3ஆவது அலையை எதிர்கொள்ள
3ஆவது அலையை எதிர்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அது போல் கொரோனா பரிசோதனைகளையும் அரசு அதிகரித்து வருகிறது. இதனால் கேஸ்கள் அதிகரித்துள்ளதாக அரசு விளக்கம் அளிக்கிறது. என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது இந்த கொரோனா அலையையும் நாம் எளிதாக வெல்லலாம்.

பங்களிப்பு என்ன
சரி பொதுமக்களின் பங்களிப்பு என்ன என்பதை பார்ப்போம். கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள முக்கிய கூட்டம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு இன்றைய தினம்தான் திறக்கப்பட்டன. இதற்கு காரணமாக பொதுமக்கள் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் வந்தது என்பதால்தான் அந்த கடைகள் மூடப்பட்டன.

கடையில் பணியாற்றுவோர்
யாரோ சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த கடையையும் மூடியதால் அந்த கடைகளில் பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது. இதே போல் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டத் தவறினால் நிறைய பேர் வேலையிழக்கக் கூடும், பலர் பொருளாதார சிக்கல்களை பெறக் கூடும். எனவே பொறுப்பான குடிமக்களாகிய நாம் முதலில் அரசு கூறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேட்டு நடக்க வேண்டும்.

முழு லாக்டவுன் அறிவித்தால்...
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் முழு லாக்டவுன் அறிவித்த போது ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கினோம். அது போல் இந்த கொரோனா முடியும் வரை நாம் பின்பற்ற வேண்டும். தெருக்களில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தலாம், மேலும் நாமும் தொற்றிலிருந்து நம்மையும் நம் சுற்றத்தாரையும் காத்து கொள்ளலாம்.

திருமணம்
அது போல் தேவையற்ற இடங்களில் கூடுவதை நிறுத்த வேண்டும். திருமணம் உள்ளிட்ட சுபவிசேஷங்களுக்கு ரத்த சொந்தம் என்றால் மட்டுமே போக வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இன்றைய தினம் திருமணத்தை யூடியூபில் லைவ் செய்வதை பலர் பத்திரிகையிலேயே குறிப்பிடுகிறார்கள். அது போல் மொய் பணத்திற்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற எண்களையும் குறிப்பிடுகிறார்கள். அதில் நம்மால் இயன்றதை செய்யலாம்.

இறப்பு சம்பவங்கள்
இறப்பு சம்பவங்களிலும் நமது நெருக்கமானவர்கள் என்றால் இறந்த அன்று அவரது முகத்தை பார்த்து விட்டு வரலாம். அதன் பிறகு அந்த வீட்டில் நடக்கும் அத்துணை சம்பிரதாயங்களிலும் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றால் போக வேண்டாம். எங்கு சென்றாலும் இரு மாஸ்க்களை போட்டு கொண்டு கையிலும் ஒரு ஸ்பேர் எடுத்துச் செல்ல வேண்டும். சானிடைசர்களை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். தங்களுக்கு கொரோனா வராது என்ற அதீத நம்பிக்கையை துடைத்தெறிய வேண்டும்.
Recommended Video

கொரோனாவும் மனிதர்களுக்கு பரவும்
நாமும் மனிதர்கள்தான். கொரோனாவும் மனிதர்களுக்கு பரவும் நோய்தான். எனவே யாருக்கு வேண்டுமானாலும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும். 60 சதவீத பெண்கள் தமிழகத்தில் தடுப்பூசி போட தயங்குகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

லட்சக்கணக்கான மக்கள்
யாரோ ஒருவருக்கு தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டால் அன்றைய தினம் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆயிரக்கணக்கான , லட்சக்கணக்கான மக்கள் நன்றாக இருக்கிறார்களே என்பதைதான் பார்க்க வேண்டும். அந்த ஒருவருக்கு ஏற்பட்டதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக தடுப்பூசியையே புறக்கணிப்பது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. எனவே தடுப்பூசிகளை போடுங்கள். மத்திய அரசும் மாநில மக்கள்தொகைக்கேற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசுகளும் அதை உரிய வகையில் பயன்படுத்தி மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனா 3ஆவது அலை வந்ததும் தெரியாமல் போவது தெரியாமல் போய்விடும். இல்லாவிட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்பதை மறக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications