திருவாரூர் ஆட்சியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! காரணம் இதுதான்
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் போது, வேட்புமனுவில் முழுமையான தகவல் தெரிவிக்காத மாவட்ட வார்டு உறுப்பினருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பா.சுப்ரமணியன், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முழுமையாக தெரிவிக்காமல் மறைத்துள்ளதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவாரூரைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனுவில் தகவல்களை மறைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், பதவிக்காலத்தை நிறைவு செய்ய அனுமதித்தது குறித்து விளக்கமளிக்கும்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் நடைமுறைகள் முடிந்து விட்டால், புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை எனவும், குற்றச்சாட்டுக்குள்ளானவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தரப்பில், சட்டப்படி தற்போது, பாப்பா.சுப்பிரமணியனுக்கு எதிராக தேர்தல் அதிகாரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேட்புமனுவில் தகவல்களை மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்காக தகவல்கள் கேட்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்த பாப்பா.சுப்பிரமணியனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறி விட்டதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications